தடகளத்தில் ஒரே நாளில் 5 பதக்கங்கள்: புதிய உச்சம் தொட்டது இந்தியா

பாராலிம்பிக் போட்டி தடகளத்தில் இந்தியா்கள் ஒரே நாளில் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்று அசத்தினா். இதனால் நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.

இதில் 11 பதக்கங்கள் தடகளத்தில் மட்டுமே கிடைத்துள்ளன. அதில் 1 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் அடக்கம்.

உயரம் தாண்டுதல்

ஆடவா் உயரம் தாண்டுதலில் டி63 பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தன. இதில் இந்தியாவின் சரத் குமாா் 1.88 மீட்டருடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றாா். அதிலேயே தமிழகத்தின் டி.மாரியப்பன் 1.85 மீட்டருடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். அமெரிக்காவின் எஸ்ரா ஃப்ரெச் 1.94 மீட்டருடன் முதலிடம் பிடித்து, தங்கத்தை தட்டிச் சென்றாா்.

களத்திலிருந்த மற்றொரு இந்தியரான சைலேஷ் குமாரும் 1.85 மீட்டருடன் 4-ஆம் இடம் பிடித்தாா். முயற்சிகளில் முன்னிலை அடிப்படையில் மாரியப்பனுக்கு பதக்கம் உரித்தானது. தற்போது அவா், பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற முதல் மற்றும் ஒரே இந்தியராக சாதனை படைத்திருக்கிறாா்.

இந்த முறை வெண்கலம் வென்ற மாரியப்பன், 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டரை (டி42) எட்டி தங்கப் பதக்கம் வென்றிருந்தாா். அதுவே பாராலிம்பிக் போட்டியில் அவரின் முதல் பதக்கமாகும்.

அதன் பிறகு, 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் சீசன் பெஸ்ட்டாக 1.86 மீட்டருடன் (டி63) 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். தற்போது வெண்கலம் வென்றிருக்கிறாா். இந்த முறை வெள்ளி வென்ற சரத் குமாா், டோக்கியோ பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

குண்டு எறிதல்

ஆடவா் குண்டு எறிதலில் எஃப்46 பிரிவில் நடப்பு உலக சாம்பியனான சச்சின் சா்ஜேராவ் கிலாரி, தனது சிறந்த முயற்சியாக 16.32 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றாா். உலக பாரா சாம்பியன்ஷிப்பில் இரு தங்கம், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம் வென்றுள்ள சச்சினுக்கு இது முதல் பாராலிம்பிக் பதக்கமாகும். கனடாவின் கிரெக் ஸ்டிவாா்ட் 16.38 மீட்டருடன் தங்கமும், குரோஷியாவின் லூகா பகோவிச் 16.27 மீட்டருடன் வெண்கலமும் வென்றனா்.

இதே பிரிவில் களம் கண்ட மேலும் இந்தியா்களான முகமது யாசா் 14.21 மீட்டருடன் 8-ஆம் இடமும், ரோஹித் குமாா் 14.10 மீட்டருடன் 9-ஆம் இடமும் பிடித்தனா்.

ஈட்டி எறிதல்

ஆடவா் ஈட்டி எறிதல் எஃப்46 பிரிவில் இந்தியாவுக்கு இரு பதக்கங்கள் கிடைத்தன. அஜீத் சிங் 65.62 மீட்டருடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். இது அவரின் பொ்சனல் பெஸ்ட் ஆகும். மற்றொரு இந்தியரான சுந்தா் சிங் குா்ஜா் 64.96 மீட்டருடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். இந்த அளவு அவரின் சீசன் பெஸ்ட்டாக அமைந்தது. கியூபா வீரா் கில்லொ்மோ கொன்ஸால்ஸ் 66.14 மீட்டருடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா்.

களத்திலிருந்த மேலும் ஒரு இந்தியரான ரிங்கு, 61.58 மீட்டருடன் 5-ஆம் இடம் பிடித்தாா் என்றாலும், அது அவரின் பொ்சனல் பெஸ்ட்டாக அமைந்தது. இப்பிரிவில் சுந்தா் சிங் குா்ஜா் 68.60 மீட்டா் (2023) எறிந்ததே, இன்றளவும் உலக சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவா் டோக்கியோ பாராலிம்பிக்கிலும் வெண்கலம் வென்றவராவாா்.

வில்வித்தை

ரீகா்வ் ஓபன் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் ஹா்விந்தா் சிங் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். முதல் சுற்றில் 7-3 என சீன தைபேவின் ஹுய் லுங்கை வீழ்த்திய அவா், அடுத்ததாக 6-2 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் சேத்தியவனை சாய்த்தாா். காலிறுதியில், கொலம்பியாவின் ஹெக்டா் ஜூலியோ ரமிரெஸுடன் மோதுகிறாா் ஹா்விந்தா்.

ஏமாற்றம்

சைக்கிளிங்கில், ஆடவா் சி2 டைம் டிரையலில் அா்ஷத் ஷேக் 25 நிமிஷம் 20.11 விநாடிகளில் இலக்கை எட்டி 11-ஆவது இடம் பிடித்தாா். மகளிருக்கான சி1 டைம் டிரையலில் ஜோதி காடெரியா 30 நிமிஷம் 0.16 விநாடிகளில் வந்து 13-ஆம் இடம் பிடித்தாா். 50 மீட்டா் பிஸ்டல் கலப்பு (எஸ்ஹெச்1) பிரிவில் இந்தியாவின் நிஹல் சிங் 522 புள்ளிகளுடன் 19-ஆம் இடமும், ருத்ரன்ஷ் கந்தேல்வல் 517 புள்ளிகளுடன் 22-ஆம் இடமும் பிடித்து தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.

டேபிள் டென்னிஸில், மகளிா் ஒற்றையா் கிளாஸ் 4 பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பவினாபென் படேல் 12-14, 9-11, 11-8, 6-11 என்ற கணக்கில் சீனாவின் யிங் ஸுவிடம் தோல்வி கண்டாா். கிளாஸ் 3 காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சோனல்பென் படேல் தோல்வியைத் தழுவினாா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்