தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்துக்கு வராமல் தடுக்க வேண்டும்: அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்துக்கு வராமல் தடுக்க வேண்டும்: அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

புதுக்கோட்டை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்துக்கு வராமல் அரசு தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

புதுக்கோட்டையில் மாவட்ட வர்த்தகக் கழகத்தின் பொன்விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விக்கிரமராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்த்து, மாதந்தோறும் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும் என்பதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள்தான் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைக்கின்றன. அதையும் தாண்டி,தற்போது ஹிந்தியிலும் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. வணிக நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும்போதே, பெயர்ப் பலகையை தமிழில் வைக்க கட்டாயப்படுத்த வேண்டும்.

போதைப் பொருள் விற்பனை செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வணிகர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. அவற்றை விற்கக்கூடாது என்பதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியமானது. சாதாரண வணிகர்களிடம் உள்ள புகையிலைப் போன்ற பொருட்களை பறிமுதல் செய்வதை நிறுத்த வேண்டும்.

தமிழக அரசிடம் வணிகர்சங்கப் பேரமைப்பு சார்பில்11 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் 6 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பலமுறை ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை திருத்தம் செய்வதற்கு முன்பாகவும் வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அபராதம் செலுத்துகிறார்கள். வழக்கை சந்திக்கிறார்கள். எனவே, திருத்தம் செய்யும்போது, வணிகர்களையும், தண்டனை, அபராதத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் வணிகர்கள் உறுதியாக இருக்கிறோம். அதேநேரம், அதுமாதிரியான பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பே, அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம்தான் பிளாஸ்டிக் உற்பத்தியும், புழக்கமும் பெருமளவில் உள்ளன. அதுபோன்ற நிறுவனங்களில் சோதனை நடத்த அலுவலர்கள் தயங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மதுரையில் துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு வாழ்த்து

‘இனி தினமும் உங்களை சந்திப்பேன்’ – மகளிரணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மேலும் 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி