தனது குடும்பத்தை சேர்ந்த 8 பேரை வெட்டிக் கொன்ற நபர்…அடுத்து எடுத்த விபரீத முடிவு

போபால்,

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம், போடல் கச்சார் கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 21-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. அதில் இருந்து அவருக்கும், அவரது மனைவிக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு அனைவரும் உறங்கிய பின்பு, அந்த இளைஞர் கோடாரியால் முதலில் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன்பின் தனது தாய், சகோதரி, சகோதரர், மைத்துனர், 3 குழந்தைகள் என ஒருவர் பின் ஒருவராக கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதில் இவரால் தாக்கப்பட்ட மற்றொரு 10 வயது சிறுவன் சிறு காயங்களுடன் அங்கிருந்து தப்பித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மஹுல்ஜிரி போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மணீஷ் காத்ரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அங்கு 8 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை வெட்டிக் கொன்ற இளைஞரை தேடினர். அப்போது அவர் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட 8 பேரின் உடல்களையும், தற்கொலை செய்த இளைஞரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அத்துடன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடாரியையும் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து மணீஷ் காத்ரி கூறுகையில்," கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடந்த 21-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. போதைக்கு அடிமையானவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த தாக்குதலில் இருந்து தப்பித்த குழந்தை கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை வெட்டிக்கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் சிந்த்வாரா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி