தனது சாதனைகளால் ஜெய்ஸ்வால் மகிழ்ச்சியாக இல்லை: ரோஹித் சர்மா

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரது சாதனைகள் குறித்து மகிழ்ச்சியாக இல்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டின் மத்தியில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது முதல் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1,217 ரன்கள் குவித்துள்ளார். அதில் 3 சதங்கள், 2 இரட்டை சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 64.05 ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 214 ஆகவும் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் 700 ரன்களுக்கும் அதிகமாக குவித்து அசத்தினார் ஜெய்ஸ்வால்.

இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டும்: பாட் கம்மின்ஸ்

எனக்கு ஆச்சர்யமாக இல்லை

யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவது தனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் திறமை வாய்ந்த வீரர். அனைத்து விதமான சூழலிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் அவரிடம் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் மிகவும் புதியவர். அவரது கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்திலேயே அவரை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஆனால், வெற்றி பெறுவதற்கான அனைத்து திறன்களும் அவரிடம் இருக்கின்றன.

ரோஹித் சர்மா (கோப்புப் படம்)

அவர் ஒவ்வொரு ஆட்டத்திலிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள நினைக்கிறார். பேட்ஸ்மேன்ஷிப் குறித்தும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார். அவரது சாதனைகள் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அவர் எப்போதும் தன்னை மேம்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அவர் இந்த இளம் வயதிலேயே நிறைய சாதனைகள் படைத்திருக்கிறார். எங்களுக்கு ஒரு மிகச் சிறந்த வீரர் கிடைத்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது மிகவும் முக்கியம். அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான சவாலுக்கு தயார்: நியூசி. கேப்டன்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (அக்டோபர் 16) பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது