தனி செயலி உருவாக்கி நீர்நிலைகளில் 23 லட்சம் பனை விதைகள் நடவு: சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை

தனி செயலி உருவாக்கி நீர்நிலைகளில் 23 லட்சம் பனை விதைகள் நடவு: சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை, சிப்காட், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி இயக்கம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரிக் கரையில் 416 கி.மீ தொலைவுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீர் நிலைகளிலும் 1 கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி கடந்த செப்.1-ம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 23 லட்சம் விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிரீன் நீடா மு.ராஜவேலு கூறியதாவது: பனை விதைகள் நடும் பணியை கடந்த 5 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு கிழக்கு கடற்கரை முழுவதும் 14 மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை 1,076 கி.மீ தொலைவுக்கு பனை விதைகளை விதைத்தோம். இந்தாண்டு பனை நடும்பணியை மாவட்ட நிர்வாகங்களு டன் இணைந்துசெய்துவருகிறோம்.

நட்ட பனை விதைகளின் எண்ணிக்கையை 'உதவி’ (udhavi) செயலியில் பதிவேற்றம் செய்து வருகிறோம். பனை விதைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை உதவி செயலியில் ‘அப்டேட்’ செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் பனை விதை நடுவதற்கென தனியாக நிதி ஏதும் ஒதுக்கப்படாத நிலையில் இதுவரை தன்னார்வலர்களைக் கொண்டு 23 லட்சம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன.

தற்போது நடப்படும் பனை விதைகளை உதவி என்ற செயலியில் பதிவேற்றம் செய்கின்றனர். பனை விதை நட்ட பிறகு புகைப்படம் எடுத்து ‘உதவி’ செயலியில் பதிவேற்றம் செய்கின்றனர். ஒவ்வொருபனை விதைகளும் சரியான புள்ளி விவரங்களுடன் அறிக்கைகள் மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரி கள் அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” – முதல்வர் ஸ்டாலின்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு