தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை (அக்.21) 5.30 மணி அளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அதுதொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று (அக்.22) காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக்.23) புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர், அது வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி காலை, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை அடையக்கூடும், என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை ஒட்டி, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, கடலூர், நாகை, மற்றும் பாம்பனில் உள்ள துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மத்தியகிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று ஏற்கெனவே, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி உருவாகவுள்ள புயலுக்கு , கத்தார் பரிந்துரைத்த 'டானா' (DANA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க >>வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

Related posts

வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தெலங்கானா அமைச்சா் சுரேகா மீது பிஆா்எஸ் செயல் தலைவா் தாக்கல்