தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குரங்கு அம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "குரங்கு அம்மை நோய்க்குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் கோவையிலும் ஏற்கனவே நான் நேரடியாக சென்று, அங்கே பரிசோதிக்கும் முறையை ஆய்வு செய்து இருக்கிறேன். இன்றைக்கு நானும் நம்முடைய பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இது சம்பந்தமாக ஆய்வை மேற்கொண்டோம்.

மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை கடந்த வாரம் பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் தொடர்பாக நேற்று சென்னையில் 11 துறைகளை ஒருங்கிணைத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கூட்டம் நடத்தப்பட்டது.

டெங்கு காய்ச்சல் பொறுத்தளவில் கடந்த கால வரலாற்றில் 2012 ஆம் ஆண்டு 67 பேர் பலியாகி உள்ளனர் அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு 65 பேர் பலியாகி உள்ளனர்.

நான் தற்போது 8 மாதங்கள் முடிந்துள்ளது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவ மழை, கோடை காலத்தில் பெய்கின்ற மழை என மூன்று மாதங்கள் மட்டுமே மழை பெய்யும். ஆனால் தற்போது மாதம்தோறும் மழை பெய்து கொண்டிருக்கின்றது அதன் காரணமாக தேங்கி நிற்கும் தண்ணீர் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகின்றது.

இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு என்பது 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும் இறப்பு என்பது 4 என்ற எண்ணிக்கையிலேயே உள்ளது.

அந்த நான்கு பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்துள்ளது. மேலும், அதிலும் ஒரு சிலர் மருத்துவமனைக்கு வராமலேயே இறந்துள்ளனர்.

இன்னும் அடுத்து வர இருக்கின்ற நான்கு மாதங்களில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். அதனால் எல்லாத் துறைகளும் ஒருங்கிணைத்து இதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என நேற்றைய தினம் அறிவுறுத்தப்பட்டது.

கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் போதை மாத்திரைகள் ஏதேனும் மருந்து கடைகளில் விற்கிறார்களா என்பது குறித்து தொடர்ந்து சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் யாரேனும் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சியில் கூட நேற்று 15 வயது சிறுமி ஆன்லைனில் ஆர்டர் செய்து சீன நிறுவனத்தின் நூடுல்ஸ் மற்றும் ஒரு குளிர்பானம் சாப்பிட்டு இறந்துள்ளார்.

அது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, அது திருச்சி மாநகரில் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று முழுமையாக சோதனை செய்ததில், ஒரு மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் நேற்று பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!