தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்.28) முதல் அக்.1-ம்தேதி வரை சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அக்.2, 3-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (செப். 28) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். செப். 27-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் 9 செ.மீ., கடவனூர், வெங்கூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம்ஆகிய இடங்களில் 5 செ.மீ.,கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூரில் 4 செ.மீ., மணலூர்பேட்டை, திருக்கோவிலூர், கோவை மாவட்டம் சின்கோனா ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சூறாவளிக் காற்று: மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்