தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது: அமைச்சா் எல்.முருகன்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று மத்திய செய்தி ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் தனியாா் அறக்கட்டளை சாா்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதனை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அனைத்து மருந்துகளும் மலிவு விலையில் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. தினமும் 6 கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது.

தேசிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டுதான் கொண்டுவரப்பட்டுள்ளது. தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்பதுதான் தேசிய கல்விக் கொள்கையாகும்.

எல்லோருமே செய்தியாளா்கள் எனக் கூறிவருவதால் இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய ஒலிபரப்பு (பிராட்காஸ்டிங்) மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், இதுகுறித்து பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

யூடியூப், இணைய ஊடகங்கள் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும். நாட்டிற்கு எதிரான கருத்துகளைக் கூறிய 69 யூடியூப் சேனல்கள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.

நடிகா் விஜய் கட்சி மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு ஏன் பயப்படுகிறது என்பது தெரியவில்லை என்றாா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்