தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பருவமழை தீவிரமடையவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. ஆண்டுதோறும் வழக்கமாக வேளாண் பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. ஆழ்துளை கிணறுகளை நம்பி பயிரிட்டவர்களின் பயிர்களும் போதிய நீரின்றி காய்ந்தது. தமிழக அரசு சார்பில் காவிரி நீரை திறக்கக்கோரி கர்நாடக அரசு, மத்திய அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் என தட்டாத கதவுகள் இல்லை.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்தது. வடமாநிலங்களில் ஜூலை மாதம் தான் பருவக்காற்று பரவி மழையை கொடுக்கத் தொடங்கியது. டெல்லி, மும்பை, அசாம், நேபாளம், குஜராத் மாநில பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு தரமாட்டோம் என்று உறுதியாக இருந்த கர்நாடக அரசால் அணைகளில் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடிக்கு மேல் சென்றது. மேட்டூர் அணை நிரம்பி, உபரிநீர் திறக்கப்பட்டு, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இனி நீருக்காக தமிழகம் எந்த கதவையும் தட்டத் தேவையில்லை என்ற நிலையை இயற்கை ஏற்படுத்தியது.

தென்மேற்கு பருவமழை விலகாமல் இருந்தாலும் ஜூன் 1 முதல் செப்.30-ம் தேதி வரை தென்மேற்கு பருவமழைக் காலமாக இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறை செய்துள்ளது. இந்த ஆண்டு இன்னும் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. தேசிய அளவில் மேற்கூறிய 4 மாதங்களில் தென் மாநிலங்களில் வழக்கத்தை விட 14 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 15 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: தற்போதைய நிலவரப்படி, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்ராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை விலகியுள்ளது. குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் பருவமழை விலகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்குள் முழுமையாக விலக வாய்ப்புள்ளது. இதர மாநிலங்களில் அக்டோபர் 2-வது வாரத்துக்குள் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகக்கூடும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 15-ம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டுவர 4 புதிய திட்டங்கள்

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல்