தமிழகம் முழுவதும் 2 மாதங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தகவல்

தமிழகம் முழுவதும் 2 மாதங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தகவல்

கோவை: தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்குள் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்தார்.

கோவையில் அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி இன்று நடந்த பரிசளிப்பு விழாவில், பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் பனாவத் வெங்கடேஷ்வரலு பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''தமிழ்நாட்டில் 6,400 இடங்களில் பி.எஸ்.என்.எல் சேவை வழங்கப்படுகிறது. தற்போது 2ஜி இணைப்புகளை 4ஜி இணைப்புகளாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 2 மாதங்களில் 4ஜி வேகத்தில் இணையதள சேவை கிடைக்கும்.

இந்தியாவில் குக்கிராமங்கள் உள்ளிட்ட 24 ஆயிரத்து 680 இடங்களில், இதுவரை சேவை வழங்கப்படவில்லை. இதில், மத்திய அரசின் அத்யோதயா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 247 இடங்களில் சேவை வழங்கப்பட உள்ளது. அதில் 500-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் நேரடியாக 4ஜி சேவை வழங்கப்படவுள்ளது. இதற்காக இதுவரை 79 சைட்கள் ஆய்வு செய்து, 100 கிராமங்களுக்கு மேற்கண்ட சேவை அளிக்கப்பட்டுள்ளது. கோவையை பொறுத்தவரை ஆனைக்கட்டியில் உள்ள 5 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கியுள்ளோம்.

புதிய பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ”தற்போது பி.எஸ்.என்.எல் பிரீ-பெய்டு சிம்-க்கான தேவை அதிகரித்துள்ளது. 4ஜி சேவை அறிவிப்பால் கடந்த 2 மாதத்திற்குள் குறிப்பாக, 4.5 லட்சம் வாடிக்கையாளர்கள் புதியதாக இணைந்துள்ளனர். இதில் 2 லட்சம் பேர் வேறு நிறுவனங்களிலிருந்து பி.எஸ்.என்.எல்-க்கு மாறியுள்ளனர். ஆப்டிக் ஃபைபர் சேவையை பொறுத்தவரை 75 சதவீதமான வாடிக்கையாளர்கள் கிராமப் பகுதியில் உள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் இணைப்புகளை கொண்டுள்ளோம்.

கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் இணைப்புகளை அடுத்த ஓராண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஃபைபர் இணைப்பு சேவையின் தேவையும் அதிகரித்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தற்போது செம்பிலான (காப்பர்) நெட்வொர்க் அனைத்தும் ஃபைபரில் ஆன நெட்வொர்க்காக மாற்றப்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து தொழில்நுட்பத்திலும் முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் 4ஜி, 5ஜி போன்ற சேவைகள் வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்படுகின்றன.

பி.எஸ்.என்.எல்-லின் முக்கியமான திட்டமாக மாநில அரசு பள்ளிகளில் பிரத்யேக திட்டத்தின் கீழ் கணினிமயமாக்கும் வகையில், மொத்தம் உள்ள 30,296 அரசு பள்ளிகளில் முதல்கட்டமாக 21, 659 அரசுப் பள்ளிகளில் இணைப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய சேவையான எஃப்.டி.டி.ஹெச் இணைப்பு சேவைக்காக 24 மணி நேர ஒத்துழைப்பு வழங்குவதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட மையம் திருச்சியில் 2 மாதத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது.

4ஜி சேவை கொண்டுவரப்பட்டால், பி.எஸ்.என்.எல் இணையதள சேவை வேகம் மேலும் அதிகரிக்கும். 10 எம்.பி.எஸ் வேகத்தில் தற்போது சேவை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் 5ஜி சேவை கொண்டு வரப்படும். ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் இணையதள வேகம் சேவை பெறப்படும் நிலையில், தற்போது பி.எஸ்.என்.எல்-லுக்கு விரைவாக 4 ஜி சேவை, அடுத்ததாக 5 ஜி சேவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஃபைபர் சேவை: செல்போன் டவர்களை தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வது போன்று, கடல் வழி சேவைக்கான ஃபைபர் பி.எஸ்.என்.எல் வழங்கியிருந்தாலும், அதனை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என விதிகள் உள்ளன. பி.எஸ்.என்.எல். சேவையை யாராலும் உளவு பார்க்க முடியாது. 100 சதவீதம் பாதுகாப்பானது” என்று அவர் கூறினார். அப்போது, பி.எஸ்.என்.எல் கோவை மாவட்ட முதன்மை பொதுமேலாளர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு