தமிழக அரசின் செயல்பாடு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது: எஸ்டிபிஐ
தென்காசி: தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தென்காசியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''தமிழக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்கக் கோரியும், முஸ்லிம் அப்பாவி ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும் நவம்பர் 16-ம் தேதி சென்னையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பேரணி நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அழிவின் விளிம்பில் உள்ள சிற்றாற்றை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் விளைநிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதை தடுக்கவும், காட்டுயானைகளால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புளியங்குடியில் எலுமிச்சை குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ நீடிக்கிறது. தமிழகத்தில் நல்ல மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 2026 தேர்தல் அதற்கான பதில் சொல்லக்கூடிய தேர்தலாக இருக்கும்.
விஜய் அரசியில் கட்சி தொடங்கியதை வரவேற்றோம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் தனது கொள்கையை மாநாட்டில் தெரிவித்துள்ளார். அது சரியா, இல்லையா என்பதை நாகரிகமான முறையில் விவாதம் நடத்த வேண்டும். மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். சரியான முடிவை எடுப்பார்கள். யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்கள்தான். விஜய் கூறியதில் நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்வோம். தவறான கருத்துகளை புறக்கணிப்போம். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூடுதலாக வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. திமுக அரசு மக்களை மிகப்பெரிய அளவில் வஞ்சித்துள்ளது.
2026-ல் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜகவுடன் மறைமுகமான கூட்டணியை திமுக வைத்துள்ளது என்பதை பல தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பாஜக எதிர்ப்பை வாயளவில் பேசி சிறுபான்மையினர் வாக்குகளை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். தமிழக அரசின் செயல்பாடுகள் மிகப்பெரிய ஏமாற்றத்தை தமிழக மக்களுக்கு தந்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும். சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கிறது. லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது'' என்றார். அப்போது திருநெல்வேலி மண்டல தலைவர் சுல்பிகர் அலி, மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.