தமிழக ரெயில்வே திட்டங்கள்: ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்து ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

மத்திய ரெயில்வேதுறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

2024-2025 நிதியாண்டுக்கான இந்திய ரெயில்வேக்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும், அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு என்றும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கணக்குத் தலைப்பு 11-புதிய பாதைகள் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், கணக்குத் தலைப்பு 15-இரட்டைப் பாதையாக்கல் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது.

மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவிற்கு அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும். அந்த வகையில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்- நகரி, அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு-பழனி, சென்னை-கடலூர்-மகாபலிபுரம், மதுரை- தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக் கோட்டை-ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும்.

அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது, தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும். அந்த வகையில், விழுப்புரம்- திண்டுக்கல், திருவள்ளூர்-அரக்கோணம் (4-வது லேன்), ஓமலூர்-மேட்டூர் அணை, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில், சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூர், காட்பாடி-விழுப்புரம், சேலம்-கரூர்-திண்டுக்கல், ஈரோடு-கரூர், சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர், அரக்கோணம் யார்டு சாலை 1 மற்றும் 2-க்கு, 3 வது மற்றும் 4 வது வழித்தடம் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும்.

மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் தொடர்பாக தெற்கு ரெயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்க விரும்புகிறேன். குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சார பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித ரெயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென மத்திய ரெயில்வேதுறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கேட்டுக்கொள்கிறேன். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும், இது தொடர்பாக மத்திய ரெயில்வேதுறை மந்திரி தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Citroen Launches Aircross Xplorer Limited Edition in India at Rs 8.49 Lakh