தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா?

பருவமழைக் காலம் தொடங்கியதில் இருந்தே, சளி, இருமல், வைரஸ் காய்ச்சல் காரணமாக மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் கரோனாவும் தலைதூக்குகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே டெங்கு, ஃப்ளூ காய்ச்சலுக்குள்ளாகி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தே இருந்தது.

பகலில் தங்கமே உருகும் அளவுக்கு அனல் பறக்கும் வெப்பநிலையும், இரவில் மண்ணை உருக்கும் அளவுக்கு மழையும் பெய்வதால், தட்பவெப்பநிலை மாற்றம் ஏற்பட்டு, பருவகால தொற்றுகளும், கொசுக்களால் பரவும் காய்ச்சல்களும் அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.

இதையும் படிக்க.. பிஎச்.டி. பட்டத்துக்கு பணம்: ஆளுநரிடம் பட்டம் பெறும்போதே புகாரளித்த மாணவர்

இந்த நிலையில், கடுமையான காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு டெங்கு, டைஃபாய்டு, கொரோனா போன்ற நோய் பாதிதப்பு இருக்கிறதா என அறிய மருத்துவப் பரிசோதனைகளை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். அதன்படி, டெங்கு, ஃப்ளூ வைரஸ் போன்று, தற்போது தமிழகத்தில் ஒரு சில கரோனா தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால், தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தில் கடந்த 12 நாள்களில் 17 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், அக். 11ஆம் தேதி ஒரே நாளில் சென்னை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் மக்கள் இது குறித்து பயம் கொள்ள வேண்டாம் என்றாலும், பண்டிகைக் காலம் மற்றும் பருவமழை தீவிரமடையும் காலம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டம் நிறைந்த பகுதிகளுக்குச் செல்வது, குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, மழையில் நனைவது போன்றவற்றை தவிர்க்கலாம். அவ்வாறு கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவதும் நல்லது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கரோனா பரவிய காலத்தில் மக்கள் எந்த வகையில் எல்லாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டோமோ, அதுபோலவே பருவமழைக் காலத்திலும் செயல்பட்டால், டெங்கு, டைஃபாய்டு, கரோனா, ஃப்ளூ வைரஸ்கள் என எதுவும் தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் பொதுவாக தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், சளி, காய்ச்சல் ஏற்பட்டால், சுய மருத்துவம் செய்துகொள்ளாமல் மருத்துவர்களை நாடவும், இணை நோய் உள்ளவர்கள் உரிய சிகிச்சையை முறைப்படி எடுத்துக்கொள்வது நலம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது