“தவெக மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய விஜய்க்கு என் வாழ்த்துகள்” – நடிகர் ரஜினிகாந்த்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ள விஜய்க்கு எனது வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு தனது போயாஸ் கார்டன் இல்லத்துக்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினங்களில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துச் சொல்வதற்காக அவரது ரசிகர்கள், போயஸ் கார்டன் இல்லத்துக்கு செல்வது வழக்கம்.
அதன்படி தீபாவளி நாளான இன்றும் ரஜினிக்கு வாழ்த்துச் சொல்ல அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர். காலையில் அவர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “அனைவரும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அப்போது விஜய்யின் மாநாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “நிச்சயமாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.