தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி நிறைவு: விரைவு, மின்சார ரயில் சேவைகள் சீரானது – சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்

தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி நிறைவு: விரைவு, மின்சார ரயில் சேவைகள் சீரானது – சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை தாம்பரம் யார்டில் சிக்னல் மேம்பாடு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் காரணமாக, விரைவு, மின்சார ரயில் சேவையில் கடந்த ஜூலை 23-ம் தேதி முதல் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, 63 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 27 விரைவு ரயில்களின் சேவை மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 14 வரை அறிவிக்கப்பட்ட இந்த மாற்றம் பின்னர் 18-ம் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது.

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தின் பிரதான போக்குவரத்தான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டாலும், பேருந்துகளில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

இதற்கிடையே, சிக்னல் மேம்பாடு, புதிய பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இரவு – பகலாக தொடர்ந்து நடைபெற்றது. ஆகஸ்ட் 18-ம் தேதி நண்பகல் 12 மணிக்குள் பணிகள் முடிந்து, ரயில் சேவை சீராகும் என்று ரயில்வே நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்தது.

அதன்படி, தாம்பரம் யார்டில் அனைத்து மேம்பாட்டு பணிகளும் நேற்று காலை வெற்றிகரமாக முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து, காலை 11.35 மணி முதல் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கின.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரம் யார்டில் மறு மேம்பாட்டு பணிகளை முடித்து, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டி உள்ளோம். பணிகள் முடிந்ததால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி 18-ம் தேதி (நேற்று) இயக்கப்பட்டது. 19-ம் தேதி (இன்று) முதல் வழக்கமான அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும். இதுபோல, விரைவு ரயில்களும் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு