தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

தமிழகத்தில் பட்டதாரி பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் கடந்த 2017 – 2021ஆம் ஆண்டு வரை எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்த தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சித்ரா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வீட்டு வேலை செய்து, தனது மகளை பட்டதாரி ஆக்கிய நிலையில், தாலிக்கு தங்கம் திட்டத்தில் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக, 2017 – 2021ஆம் ஆண்டு வரை ஒதுக்கிய நிதி தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த தாலிக்கு தங்கம் திட்டத்தில் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள்? எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன? மத்திய – மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து