ராய்ப்பூர்,
சத்தீஸ்கார் மாநிலம், பில்சாபூர் மாவட்டத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடத்துள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் பாம்பு பதுங்கியிருந்தது. இதனால் ஊழியர்கள், பாம்பு மீட்கும் குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பயிற்சி பெற்ற பாம்பு பிடிக்கும் இளம் பெண், அஜிதா பாண்டே பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அஜிதா பாண்டே, அலுவலகத்திற்குள் நடந்து செல்கிறார். அப்போது ஊழியர்கள் பாம்பு அங்கு அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களுக்கு பின் மறைந்திருப்பதாக கூறுகின்றனர். அவர்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்ற அஜிதா, பாம்பு எங்கே என தேடுகிறார். அப்போது ஒருவர், பாம்பு தாவி தாக்க வாய்ப்புள்ளது, பாதுகாப்பாக இருங்கள் என்று கூறுகிறார். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத அஜிதா, பாம்பை வெறும் கைகளால் லாவகமாக பிடிக்கிறார். பின்னர் அங்கிருந்த சாக்கு பையில் பாம்பை எடுத்து போட்டுக்கொண்டு நடந்து செல்கிறார்.
இந்த பாம்பு விஷமற்றது. இது எலி அல்லது பூச்சிகளை பிடிக்க இந்த இடத்திற்கு வந்திருக்க கூடும். யாரும் பயப்பட வேண்டாம் என்று பாண்டே சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார். அந்த பாம்பு உங்களை கடிக்க முயற்சிக்கவில்லையா என ஊழியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாண்டே, "இல்லை, அதை நீங்கள் தொந்தரவு செய்யாததால் அது மிகவும் அமைதியாக உள்ளது" என சிரித்த முகத்துடன் தெரிவித்துள்ளார். அஜிதாவின் இந்த துணிச்சலான செயல் மற்றும் தெளிவான பேச்சை கண்டு அங்கிருந்தவர்கள் அவருக்கு கை தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என சொல்வார்கள், ஆனால் இந்த பெண்ணோ மிகவும் துணிச்சலுடன் பாம்பை பிடித்து செல்கிறாரே என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
I first thought she's here to fix the HDMI cable that might have come loose pic.twitter.com/U3vt3o53R2
— Yo Yo Funny Singh (@moronhumor) July 27, 2024