திடீரென முடங்கிய விண்டோஸ்.. விமான சேவைகள், பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பு

புதுடெல்லி:

மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு புளூ ஸ்கிரீன் ஆப் டெத் என்ற பாதிப்பு திரையில் தோன்றியது. அதில், 'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நாங்கள் சில தவறுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக, விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன. இந்தியாவில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விண்டோஸ் செயல்படாததால் விமானங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இந்திய விமான நிறுவனங்கள் இந்த பாதிப்பு குறித்து பயணிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளது.

இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. பாதிப்பு சரி செய்வது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி