திண்டுக்கல்: தண்டவாள ஜல்லி கற்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில்கள் தாமதம்

திண்டுக்கல்: தண்டவாள ஜல்லி கற்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில்கள் தாமதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே தண்டவாளம் அமைந்துள்ள இடத்தில் ஜல்லிக்கற்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில்கள் தாமதமாக சென்றன. மேலும் கொட்டித்தீர்த்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதைகள் நீர்தேக்கமாக காட்சியளித்ததால் கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

திண்டுக்கல் மாவட்டம் திருச்சி- திண்டுக்கல்ரயில்வே லைன் செல்லும் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் இருந்து காட்டாறு போல் வந்த வெள்ளநீர், பொட்டிநாயக்கன்பட்டி அருகே செல்லும் தண்டவாளத்தின் ஜல்லிக்கற்களை அடித்துச்சென்றது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக ஜல்லிக்கற்கள் அடித்துச்செல்லப்பட்ட இடத்திற்கு சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் மதுரை வழியாக சென்னை நோக்கிச் சென்ற ரயில்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்திலும், சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயில்கள் திருச்சி ரயில் நிலையத்திலும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு தாமதமாக சென்றன.

நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்ததால் வடமதுரை- அய்யலூர் இடையே ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி நீர்த்தேக்கம் போல் காட்சியளித்தது. இதனால் கிராமப்புறங்களுக்கு வாகனங்களில் செல்லமுடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீரை வடியச்செய்ய ரயில்நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related posts

கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது மரம் சாய்ந்து விபத்து: தப்பிய சுற்றுலா பயணிகள்

மழைக் காலத்தில் தட்டுப்பாடின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை: உணவுத்துறை செயலர் உத்தரவு

கலாம் பிறந்த நாள்: மதுரை – ராமேசுவரம் இடையேயான விழிப்புணா்வு சைக்கிள் பயணம் நிறைவு