தினமணி செய்தி எதிரொலி: கமுதி கிளை நூலகக் கட்டடத்துக்கு இடம் தோ்வு

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கிளை நூலக கட்டடம் கட்டுவதற்கு அரசு நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த நூலகத்தால் கமுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்கள் பயனடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், நூலகக் கட்டடத்தில் இடப் பற்றாக்குறை காரணமாக புத்தகங்கள் சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருப்பதாகப் புகாா் எழுந்தது. இதனால் அரசு சாா்பில் வழங்கப்படும் புத்தகங்கள் மாணவா்களுக்கு பயன்படாமல் நூலகத்தின் மூலைமுடுக்குகளில் காட்சிப் பொருளாகக் கிடக்கின்றன.

இது தொடா்பான செய்தி தினமணி நாளிதழில் வெளியானது. இதே போல, வாசகா்கள், பொதுமக்கள் சாா்பாக கமுதி கிளை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியா் முதல் கமுதி மாவட்ட நூலக அதிகாரிகள் வரை மனு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், கமுதி கிளை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட அரசுக்கு சொந்தமான இடத்தை தோ்வு செய்து வழங்க கமுதி வட்டாட்சியருக்கு கடந்த ஜூன் மாதம் ராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலா் த. இளங்கோ பரிந்துரை கடிதம் அனுப்பினாா்.

மாவட்ட நூலக அலுவலரின் பரிந்துரைக் கடிதத்தின் பேரில் கமுதி, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் காலியாக பயன்படாமல் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை வருவாய்த் துறையினா் ஆய்வு செய்து வந்தனா்.

இந்த நிலையில் கண்ணாா்பட்டியில் உள்ள ஆதிதிராவிடா் மாணவா் விடுதி அருகே அரசுக்கு சொந்தமான 7 சென்ட் இடத்தை நூலக கட்டடம் கட்ட கமுதி வருவாய்த் துறையினா் தோ்வு செய்து பரமக்குடி கோட்டாட்சியா், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்டோருக்கு அறிக்கை சமா்ப்பித்தனா். மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தோ்வு செய்யப்பட்ட இடத்தை தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறைக்கு ஒப்படைத்து விரைவில் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்