திமுகவும், முதல்வர் பதவியும் என் இரு கண்கள்: மு.க.ஸ்டாலின்!

திமுகவும், முதல்வர் பதவியும் என் இரு கண்கள் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திமுக பவள விழா

திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(செப். 17) மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

17.9.1949-இல் முன்னாள் முதல்வா் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, 75 ஆண்டுகளை நிறைவு செய்து தனது பவள விழாவை இன்று கொண்டாடுகிறது. இத்துடன் பெரியார், அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

சென்னை நந்தனத்தில் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை தொடங்கியுள்ள விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் தலைமை வகிக்க, பல்வேறு விருதுகளை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருதாளா்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.

துணை பொதுச் செயலா்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினர்.

முதல்வர் பேச்சு

விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

முப்பெரும் விழா மற்றும் பவள விழாவை ஏற்பாடு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கும் கழக தொண்டர்களுக்கும் வாழ்த்துகள். தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை. தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன். தொண்டர்களின் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.

அமெரிக்கா சென்றோம் என்பதைவிட முதலீடுகளை வென்றோம் என்றே சொல்ல வேண்டும். இதனால் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். அமெரிக்கவாழ் தமிழர்கள் நல்ல வரவேற்பளித்தனர்.

கழக தொண்டர்களின் அரவணைப்பும், கலைஞரின் வழிகாட்டுதலும் தான் என்னை பவள விழா கண்ட திமுகவுக்கு தலைவராக உயர்த்தியுள்ளது. திமுகவும் முதல்வர் பதவியும் எனது இரு கண்களாக இருக்கின்றன.

பவளவிழாவை நடத்துவது எனது வாழ்நாளில் கிடைத்த பெருமையாக கருதுகிறேன். அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக உருவாக்கப்பட்ட நாளை இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

25, 50, 75 ஆண்டுகளிலும் திமுக ஆட்சியில் இருந்திருக்கிறது. திமுக தமிழ்நாட்டை வளமிக்க மாநிலமாக மாற்றியிருக்கிறது.

நிதியுரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசிடம் இன்னும் போராட வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். ஏராளமான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒற்றை இலக்குடன் திமுக செயல்பட்டு வருகிறது.

இன்றைக்கு கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்பதைக் கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் மாநில சுயாட்சியை மீட்டெடுப்பதற்கான ஓர் அறிவிப்பு தான் இந்த பவள விழா.

இதுவரை நடந்த தேர்தல்களை போல அடுத்தடுத்து வரப் போகும் தேர்தல்களிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். நம்முடைய அடுத்த இலக்கு 2026 தேர்தல். இதுவரை எந்தக் கட்சியும் பெற்றிராத வகையில் மிகப்பெரிய வெற்றியை நமது கழகம் பெற வேண்டும்” என்றார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்