“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தாக்கு

“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தாக்கு

பல்லாவரம்: “திமுக ஆட்சியில் 6 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி குற்றஞ்சாட்டினார்.

அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. பல்லாவரம் பகுதிச் செயலாளர் த.ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா வளர்மதி, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.தன்சிங் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது: அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட ஒரே ஒரு தகுதி படைத்த கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணாவின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என எம்ஜிஆர் பெயர் சூட்டினார். இன்று பவள விழாவை கொண்டாடும் திமுகவினர் அண்ணாவின் பெயரை நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லாத நிலையில் உள்ளனர்.

அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது எதற்கெடுத்தாலும் கருணாநிதியின் பெயரைச் சூட்டுகிறார்கள். அவர்கள் பேரறிஞர் அண்ணாவை முழுவதுமாக மறந்து விட்டனர். தற்போது உள்ள திமுக ஆட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. நேற்றைய தினம் துரைப்பாக்கத்தில் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. எனவே பெண்கள் இதனை உணர வேண்டும்.

சட்டம் – ஒழுங்கு நிலைமை படுபாதாளத்திற்குச் சென்று விட்டது. 6 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை இந்த ஆட்சியில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் இதுபோன்று கொடூரச் செயல்களை செய்பவர்கள் மீது 13 தண்டனைகள் கொடுக்கப்பட்டது. அத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் தற்போது எங்கே போனது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது. பெண்கள் பாதிக்கக் கூடிய வகையில் செயல்படும் எந்த அரசும் உருப்படாமல் போய்விடும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்