தியாகிகள், சான்றோரை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள திமுக ஆட்சியில் 10 நினைவரங்கங்கள், 36 சிலைகள் திறப்பு: தமிழக அரசு பெருமிதம்

தியாகிகள், சான்றோரை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள திமுக ஆட்சியில் 10 நினைவரங்கங்கள், 36 சிலைகள் திறப்பு: தமிழக அரசு பெருமிதம்

சென்னை: சுதந்திர போராட்டத் தியாகிகள், தமிழ்ச்சான்றோரை இளம் தலை முறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், திமுக ஆட்சியில் இதுவரை 10 நினைவரங்கங்கள், 36சிலைகள் திறக்கப்பட்டு இந்தியாவுக்கே வழிகாட்டுவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஆற்றிய பணிகளில் சிறந்தது, குமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரம்கொண்ட மாபெரும் கற்சிலையை ரூ.9.65 கோடியில், 2000-ம் ஆண்டுஜனவரி 1-ம் தேதி திறந்துவைத்த தாகும். திருவள்ளுவர் சிலை போல்எண்ணற்ற சிலைகள் மணிமண்ட பங்களை நிறுவி தியாகிகளை கருணாநிதி போற்றியுள்ளார்.

அவரது வழியில், திராவிட மாடல்ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022-ம் ஆக.15-ம் தேதி எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகள் சிலை, அதே ஆண்டில், கருணாநிதிக்கு ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் சிலை, 2023 ஆக. 10-ம் தேதிநுங்கம்பாக்கம் அன்பழகனார் கல்வி வளாகத்தில் க.அன்பழகனுக்கு சிலை, 2021 டிசம்பர் 26-ம் தேதி நாவலர் நெடுஞ்செழியனுக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், அம்பேத்கருக்கு மணிமண்டப வளாகத்தில் சிலை, கரிசல்இலக்கிய பிதாமகர் கி.ராஜநாரா யணனுக்கு கோவில்பட்டியில் நினைவரங்கம், உத்தரப்பிரதேச மாநிலம், காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்பட்டு அவரது உருவச்சிலை,நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயக ருக்கு சிலை, பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல் லப்பட்ட பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சார்ந்த 16 தியாகிகளைச் சிறப்பிக்கும் நினைவு மண்டபம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.

கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டிய சகோதரர்கள் சிலைகள், கோவை வ.உ.சி. பூங்காவில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மயிலாடுதுறையில் பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையர், புதுக்கோட்டையில் சமூக சீர்திருத்த வேங்கை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கும் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.

திரைப்படப் பின்னணிப் பாடகர்டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரை யிலும், டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னை காந்தி மண்டப வளாகத்திலும், சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூருக்கும், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கும், கடலூர் மாநகராட்சி முதுநகர் காந்திபூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கும் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தூத்துக்குடி நகராட்சி தலைவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்க்கு குவிமாடத்துடன் கூடிய சிலை, சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதருக்கு சிலையுடன் மணிமண்டபம், தூத்துக்குடியில், வீரமாமுனிவருக்கு சிலையுடன் மணிமண்டபம், நாமக்கல் நகரில் நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை நினைவில்லத்தில் மார்பளவு சிலை ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளன.

அண்ணா நினைவிட வளாகத்தில் ‘கலைஞர் உலகம்’ எனும் அருங்காட்சியகத்துடன் கருணாநிதியின் நினைவிடம், பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபங்கள், இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் தங்கோ, மு.வரதராசனார், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோருக்கு சிலைகள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

மேலும், தென்காசியில் சுதந்திரப்போராட்ட வீரர் வெண்ணி காலாடி,சிவகங்கையில் சுதந்திரப் போராட்டவீராங்கனை குயிலி ஆகியோருக்கு சிலைகள், உடுமலைப்பேட்டையில் சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் சிலை மற்றும் அரங்கம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

அந்த வகையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை, 10 நினைவரங்கங்கள் 36 சிலைகளை அமைத்துள்ளார். மேலும் பல தியாகிகளுக்குரிய நினைவுச் சின்னங்களையும் அமைத்து வருகிறார். இவை, சுதந்திரப் போராட்டத் தியாகிகள், சமூகநீதி வேங்கைகள், தமிழ்ச் சான்றோர்கள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்திட இந்தியாவுக்கே வழிகாட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” – முதல்வர் ஸ்டாலின்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு