தீபாவளியை முன்னிட்டு அசாம் ரைபிள் படையினர் கடந்த 30-ந்தேதி நடத்திய சோதனையில், ரூ.18 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அகர்தலா,
திரிபுராவில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்த முயன்ற நபரை கைது செய்த போலீசாருக்கு முதல்-மந்திரி மாணிக் சஹா பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.
திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் அம்பாஸ்சா பகுதியில் போதை பொருள் கடத்தப்படுகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்ட அம்பாஸ்சா போலீசார் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி, சோதனையிட்டனர்.
இதில், மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட 80 ஆயிரம் யாபா மாத்திரைகள், அந்த வாகனத்தில் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது. அந்த வாகனத்தின் ஓட்டுநரையும் போலீசார் கைது செய்தனர். போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தும் உள்ளனர்.
அம்பாஸ்சா போலீசாரின் இந்த நடவடிக்கைக்காக முதல்-மந்திரி மாணிக் சஹா தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து உள்ளார். கடந்த 30-ந்தேதி, தீபாவளியை முன்னிட்டு அசாம் ரைபிள் படையினர் நடத்திய சோதனையில், 90 ஆயிரம் யாபா மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில், மேற்கு திரிபுரா மாவட்டத்தின் நரங்கபாரி பகுதியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு ரூ.18 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.