திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா – நாளை தொடங்குகிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் கிரிப்பிரகார வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

7-ம் திருநாளான 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். விழா நாட்களில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொள்ளும் வகையில் 18 இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related posts

அமித் ஷா மீது குற்றச்சாட்டா? கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன்

Pune: MVA Backs Independent Bapu Bhegade, Fields No Candidate In Maval Assembly Constituency Against NCP’s Incumbent MLA Sunil Shelke

Video: Man Assaults Woman In Greater Noida, Pulls Her Hair And Hits Her As Residents Step In; Police Respond