திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு முன்னதாக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகள், நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
அவருடன் பவன் கல்யாணும் பத்திரத்தில் கையெழுத்திடும் புகைப்படங்கள் ஜனசேனா கட்சியின் எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
பவன் கல்யாணின் தீட்சை
திருமலை ஏழுமலையான் லட்டு கலப்பட விவகாரத்திற்காக கடந்த 10 நாள்களுக்கு முன் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் பிரயாசித்த தீட்சை மேற்கொண்டு முக்கிய கோயில்களில் சுத்திகரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அந்த பிராயச்சித்த தீட்சை திருமலை ஏழுமலையான் தரிசனத்துடன் இன்று நிறைவு பெறுகிறது.இதற்காக திருப்பதி வந்தடைந்த பவன் கல்யாண், அலிபிரி மலைப்பாதையில் பாதயாத்திரையாக நேற்று மலையேறினார்.
அவருடன் அவரது மகள்கள் ஆத்யா மற்றும் போலேனாவும் இன்று திருப்பதிக்கு உடன் வந்துள்ளனர்.
திருப்பதி செல்லும் ஜெகன்மோகன் ரெட்டி நம்பிக்கை தெரிவிக்க வேண்டும்: பாஜக
நம்பிக்கை பிரமாணப் பத்திரம் ஏன்?
ஒருவரின் நம்பிக்கையை அறிவிக்கும் நடைமுறை, திருமலையில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆந்திர வருவாய் அறக்கட்டளை-1, விதி எண் 16 இன் எம்.எஸ்எண்-311-ன் படி, இந்துக்கள் அல்லாதவர்கள் விசுவாச வடிவத்தில் தரிசனத்திற்குமுன், வைகுண்ட வரிசை வளாகத்தில் ஓர் அறிவிப்பை வழங்க வேண்டும்.
இது திருமலை திருப்பதி தேவஸ்தான பொது விதிமுறைகள் விதி 136 இன் படி உள்ளது.
இந்த நிலையில், பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னேவாவுக்கு பிறந்த போலேனா, ஹிந்து அல்லாதவர் என்பதால் தரிசனத்துக்கு முன்பு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
அவர் 18 வயதுக்கு உள்பட்ட பெண் என்பதால், பவன் கல்யாணும் மகளின் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
ஜெகன் மோகனுக்கு பாடம்?
மகளை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வைத்ததன் மூலம், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன மோகன் ரெட்டிக்கு பவன் கல்யாண் மறைமுக பாடம் கற்பித்துக் கொடுத்துள்ளதாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
முன்னதாக, கடந்த வாரம் திருமலைக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்த ஜெகன் மோகன் ரெட்டி, ஹிண்டு அல்லாதவர் என்பதால் அவரை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட பாஜக வலியுறுத்தியது.
இதனிடையே, தனது திருப்பதி பயணத்துக்கு காவல்துறை உரிய அனுமதி வழங்கவில்லை என்று ஜெகன் மோகன் ரெட்டி பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.