திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜக யுவமோச்சா பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஜயவாடா அருகே தாடேபள்ளியிலுள்ள ஜெகன்மோகன் வீட்டை திடீரென்று முற்றுகையிட்டு பாஜக யுவ மோட்சா பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெகன்மோகனின் சித்தப்பாவும் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவருமான சுப்பா ரெட்டி ஆகியோருக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் இது கலக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு உள்பட தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம்சாட்டினாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி.யும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி ஆந்திர உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கை வரும் செப்.25-ஆம் தேதி விசாரிக்கவுள்ளதாக உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

இதனிடையே திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் கைது