திருமலையில் வருடாந்திர பவித்ரோற்சவம்: 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து

பவித்ரோற்சவ நாட்களில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. முன்னதாக, 14-ந்தேதி மாலை பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம் நடக்கிறது.

முதல் நாள் பவித்ர பிரதிஷ்டை, 2-வது நாள் பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 3-வது நாள் பவித்ர பூர்ணாஹுதி நடக்கிறது. 3 நாட்களுக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

ஆண்டு முழுவதும் சமயப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளால் தோஷங்கள் ஏற்படுகின்றன. தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

பவித்ரோற்சவம் நடைபெறும் 3 நாட்களும் மாலையில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்தப் பவித்ரோற்சவம் காரணமாக, கோவிலில் 14-ந்தேதி சஹஸ்ர தீபலங்கார சேவை, 15-ந்தேதி திருப்பாவாடை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்களிலும் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தொண்டமான்புரம் கோவிலில் 17-ந்தேதியில் இருந்து 19-ந்தேதிவரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவமும், 16-ந்தேதி மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்