திருமலை தெப்பக்குளத்தில் பராமரிப்பு பணி.. பக்தர்கள் குளிக்க சிறப்பு ஏற்பாடு

பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக, தெப்பக்குளத்தை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.

திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் பங்கேற்று பேசியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் இறுதிக்குள் பிரம்மோற்சவ விழா பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

திருமலையில் வருகிற 15-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. முன்னதாக 14-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

கோவில் புஷ்கரணி மூடப்பட்டுள்ளதால், பக்தர்கள் புனித நீராடும் வகையில் புஷ்கரணியின் மேல்பாகத்தில் குளியல் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதைப் பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

திருமலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னப்பிரசாதத்தின் சுவையை அதிகரிக்க உயர்தர அரிசி மற்றும் அதிநவீன சமையல் அறை எந்திரங்கள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதேபோல் திருமலையில் குடிநீர், உணவுப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை தொடர்ந்து சோதிக்க உணவுப்பாதுகாப்புத் துறையின் கீழ் ஒரு அதிநவீன ஆய்வகம் அமைக்கிறோம். திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தின் சுவை மற்றும் தரத்தை அதிகரிக்க தரமான மூலப்பொருட்கள் மற்றும் நெய் போன்றவற்றை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக, தெப்பக்குளத்தை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். இந்த பணிகள் முடியும் வரை தெப்பக்குளம் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள… https://x.com/dinathanthi

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்