திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்துவிட்டது: தமிழிசை

திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்துவிட்டது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை தி. நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

மெட்ரோ இரண்டாவது கட்ட ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது சென்னையை 4 முனைகளில் இருந்து இணைப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவும்.

ஒரு கோடியே 26 லட்சமாக இருக்கின்ற மக்கள் தொகை இன்னும் வரும்காலங்களில், ஒரு கோடியே 90 லட்சமாகிவிடும் என்று சொல்கிறார்கள். அப்போது சாலைப் போக்குவரத்து மிகவும் நெரிசல் ஆகிவிடும் என்பதற்காக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நேற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

திருமாவளவன் நடத்திய மாநாட்டில் தனக்கு காந்தியின் கொள்கைகள் பிடிக்காது, அவர் இந்து மதத்தில் தீவிரமாக இருந்தவர், சாகும்போது கூட ஹரே ராம் என்று கூறியவர் என்பதால் எனக்கு அவரைப் பிடிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவனின் கட்சியில் கூட இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் திருமாவளவன் இந்து மத நம்பிக்கை உள்ளவர்தான். அவர் காந்தி பிறந்த நாள் என்பதற்காக அக்டோபர் இரண்டாம் தேதி மாநாடு நடத்தவில்லை, அன்று நிறைந்த அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.

நான் திருமாவளவன் நாகரீகமான தலைவர் என்று நினைத்திருந்தேன். ஆனால், அந்த மேடையில் அவர் பேசியதை பார்த்ததும் அவர் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்துவிட்டது என்றும், அவரை வக்கிரதன்மையின் அடையாளமாகப் பார்க்கிறேன்.

தம்பி விஜய் தனது மாநாட்டு கடிதத்தில் மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ கட்சிகள் ஆண்டக் கட்சிகளாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றன உங்கள் கட்சி புதிய கட்சி, உங்கள் கட்சியை உயர்வாக சொல்வதில் தவறில்லை, அதே நேரத்தில் மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும்.

இப்போது ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் விஜய்யின் கட்சியும் இருக்கிறது. பெரியாரையும் கும்பிடுகிறார்கள், கடவுளையும் கும்பிடுகிறார்கள், நேரம் காலம் பார்த்துதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். அதாவது, திமுக எதை செய்கிறதோ, அதேபோலத்தான் தம்பி விஜய்யின் கட்சியும் செய்கிறது, சுருங்கச் சொன்னால் திமுகவை போல் விஜய் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது,

காந்தியை விமர்சித்தப் பிறகும் திருமாவளவனை காங்கிரஸ் கூட்டணியில் வைத்திருக்கிறது, காங்கிரஸை பொருத்தவரை காந்தியை விமர்சித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள், சோனியா காந்தியையோ அல்லது ராகுல் காந்தியையோ விமர்சித்தால் மட்டுமே துள்ளி குதிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!