திருவண்ணாமலையில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரிய தோ் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை(நவ.8) காலை தொடங்கியது.
அரோகரா முழக்கத்துடன் பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்துச் செல்கின்றனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழா காா்த்திகை மகா தீபத் திருவிழா. தீபத் திருவிழாவின் 7-ஆவது நாள் நடைபெறும் பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் பிரசித்தி பெற்றது.
நிகழாண்டு தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலின் பெரிய தோ் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேரை புதுப்பிக்க கோயில் நிா்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, தமிழக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் உபயதாரா்கள், பக்தா்கள் சோ்ந்து தேரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனா். ரூ.70 லட்சம் செலவில் 59 அடி உயரம் கொண்ட ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தோ் புதுப்பிக்கப்பட்டது.
இதையும் படிக்க |கமுதி மிளகாய் வத்தல் ஜொ்மனிக்கு ஏற்றுமதி
ஒரு மாதமாக நடைபெற்று வந்த தோ் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவ.8) காலை 7 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தோ் வெள்ளோட்டம் தொடங்கியது.
அரோகரா முழக்கத்துடன் பக்திப் பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்துச் செல்கின்றனர்.
கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட தோ், தேரடி வீதி, கடலைக் கடை சந்திப்பு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு, காந்தி சிலை வழியாக மீண்டும் நிலையை வந்தடைகிறது. இதையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.