திருவள்ளூர் ரயில் விபத்து: பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்பு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது.

இதையும் படிக்க:கவரைப்பேட்டை ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!

இந்த நிலையில், விபத்தில் சிக்கியுள்ள மைசூர் – தர்பங்கா பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் (12578) பயணித்த 1,650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின், செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, இந்த விபத்தில் ரயிலிலிருந்த 19 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். அவர்களில் படுகாயமடைந்த 4 பயணிகள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் 15 பயணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 3 பயணிகளுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. ஒரு பயணிக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: கவரப்பேட்டை ரயில் விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்!

பொன்னேரி அருகே 3 திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் திருமண மண்டபங்களில் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: திருவள்ளூர் ரயில் விபத்து: தர்பங்கா செல்ல சிறப்பு ரயில்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தர்பங்காவுக்கு சிறப்பு ரயிலில் பயணிகளை அனுப்பிவைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!