திரைக்கதையாளர், எழுத்தாளர் எம்.கே.மணி மறைவு: கமல்ஹாசன் இரங்கல்!

திரைக்கதையாளர், எழுத்தாளர் எம்.கே.மணி மறைவு: கமல்ஹாசன் இரங்கல்!

திரைக்கதையாசிரியரும் எழுத்தாளருமான மணி எம்.கே.மணி காலமானார்.

சென்னையில் வாழ்ந்துவந்த எழுத்தாளர் மணி எம்.கே.மணி சிறுகதைகளால் இலக்கிய பரப்பில் கவனிக்கப்பட்டவர். இவர் எழுதிய மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம், டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல், ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் சிறுகதைத் தொகுப்புகளும் மதுர விசாரம் நாவலும் வாசகர்களிடையே கவனம் பெற்றவை.

சினிமா துறையிலும் நீண்ட காலம் திரைக்கதையாளராக பணியாற்றிவர். இவர் எழுத்தில், நடிகர் கதிர் நடித்து வெளியான சிகை திரைப்படம் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜி படமொன்றில் திரைக்கதை பங்களிப்பை செய்தார்.

இறுதியாக, இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் வெளியான டெவில் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். சில இணையத் தொடர்களின் கதை விவாதங்களிலும் பங்கேற்றவர்.

உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று (ஜூலை 15) சென்னையில் காலமானார். இவர் மறைவிற்கு எழுத்தாளர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள்.” எனக் கூறியுள்ளார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்