தில்லியின் ஆனந்த் விஹாரில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு உடல்நிலை பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தலைநகர் தில்லியில் நாளுக்குநாள் காற்று மாசு மோசமான நிலைக்கு மாறிவருவது மக்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது. வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி, வெப்பநிலை சரிவுடன், நகரத்தில் காற்றழுத்தம் குறைவாக உள்ளதால், மாசு அளவு அதிகரித்து வருகிறது. இதற்கு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் அறுவடைக்குப்பின்னர் விவசாய நிலங்களில் மீதமுள்ள கழிவுகளை எரிப்பதால் தலைநகரில் காற்று மாசு அதிகரித்துள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு புகையால் தில்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது.
காற்றின் தரக் குறியீடு எண் 300-க்கும் மேல் அதிகரித்து மிக மோசமான நிலையை எட்டியது. இதனால் மக்கள் ஆஸ்துமா, சுவாசப்பிரச்னை, தலைவலி, கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் தில்லி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய், ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி 389ஆக இருந்தது, அதே நேரத்தில் ஆனந்த் விஹாரில் 419ஆக இருந்தது.
ஆனந்த் நகர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான ஜாவேத் அலி, மோசமான காற்றின் தரம் குறித்து தனது பிரச்னைகளைப் பகிர்ந்து கொண்டார். எனது கண்கள் தொடர்ந்து எரிச்சல் மற்றும் அடிக்கடி சிவப்பு நிறமாக மாறுகிறது. இதனால் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. என்னதான் முகக்கவசம் அணிந்தாலும், அதை நீண்ட நேரம் அணிவது சிரமமாக உள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிலையில், ஆனந்த் விஹாரில் வசிக்கும் பலர் குடியிருப்புகளைக் காலிசெய்துவிட்டு வேறு இடத்திற்கு மாறுதலாகியும் செல்கின்றனர்.