தில்லியில்.. இசைப் பேச்சில் மறைந்திருந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல்! கண்டுபிடித்தது எப்படி?

புது தில்லி: தில்லியில் ரூ.5,600 கோடி மதிப்பிலான கோகைன், கஞ்சா போன்ற போதைப் பொருள்கள், காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், இசைப் பேச்சுக்குப் பின்னால் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான சங்கேத பேச்சு இடம்பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல்களுக்கான செயலியான த்ரீமாவில், இசை ஆர்வம் கொண்ட இரண்டு பேர் பேசிக்கொள்ளும் அப்பாவித்தனமான பேச்சுதான் இத்தனை கோடி மதிப்பிலான போதைப் பொருள்களைக் காட்டிக்கொடுத்துள்ளது.

துபையைச் சேர்ந்த வீரு, மும்பையைச் சேர்ந்த ஜெய் உடன் பிரிட்டிஸ் ராக் இசைக் குழுவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

இந்த பேச்சினை யார் கேட்டிருந்தாலும், இதில் என்ன இருக்கிறது என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால், புலனாய்வுத் துறையின் காதுகளில், இந்த இசைப் பேச்சுக்குப் பின்னால் ஒளிந்திருந்த சந்கேத மொழிகளும் கேட்டிருக்கிறது.

இதையும் படிக்க.. மழையால் சாலைகள் நிரம்புகின்றன.. குளங்கள்? ஒரு சொட்டு நீர் இல்லாத 20% நீர்நிலைகள்!!

இவர்கள் இருவரும், போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்கள் போல செயல்பட்டு, நடத்தவிருக்கும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத்தான், இசை நிகழ்ச்சியை சந்கேத மொழியாக வைத்துப் பேசியிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் பேச்சில் இருந்த ஒரு கிஃப்ட் என்ற வார்த்தைதான் இதற்கு முக்கிய காரணம். அதாவது, பனாமா வழியாக துபையிலிருந்து கோவாவுக்கு கிஃப்ட் வருகிறது என இவர்கள் குறிப்பிட்டதை காவலர்கள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.

இவர்கள் சொன்னபடி, வந்த கிஃப்ட் என்ன என்று பார்க்க காவலர்கள் முடிவெடுத்தனர். இந்த த்ரீமாவில், இவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.

இந்த நிலையில்தான், மிகப்பெரிய அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலில் ஒரு சில எடையுள்ள போதைப் பொருள்கள்தான் வரும் என எதிர்பார்த்த புலனாய்வு அதிகாரிகளுக்கு 560 கிலோ எடையுள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்ததும் அவர்களே அதிர்ச்சியடைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் இதுவரை இல்லாத அளவில் போதைப் பொருள்கள் கடந்த வாரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது. இது தொடர்பாக, தில்லியைச் சேர்ந்த துஷார் கோயல் (40), ஹிமான்ஷு குமார் (27), ஒளரங்கசீப் சித்திக் (23), மும்பையைச் சேர்ந்த பாரத் குமார் ஜெயின் (48) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

இது தொடர்பாக தில்லி காவல் துறை கூடுதல் ஆணையர் (சிறப்புப் பிரிவு) பி.எஸ்.குஷ்வா கூறுகையில், வசந்த் விஹார் பகுதியைச் சேர்ந்த கோயல், சர்வதேச போதைப் பொருள் கும்பல்களிடம் போதைப் பொருளை வாங்கி, இந்தியா முழுவதும் விநியோகித்து வந்துள்ளார். இதர மூவரும் அவரது கூட்டாளிகளாக செயல்பட்டு வந்துள்ளனர்.

கோகைன் போதைப் பொருளை கோயலிடம் இருந்து வாங்குவதற்காக, மஹிபால்பூர் பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்குக்கு கடந்த அக்.1-ஆம் தேதி ஜெயின் வந்தார். இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில் அங்கு பதுங்கியிருந்த காவல் துறையினர், கோயல் உள்பட 4 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். சேமிப்புக் கிடங்கில் இருந்த பெட்டிகளில் 560 கிலோ கோகைன், 40 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் தோராயமான சர்வதேச மதிப்பு ரூ.5,620 கோடியாகும்.

கஞ்சா தாய்லாந்தில் இருந்தும், கோகைன் மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தும் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கோயலுக்கு துபை மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள கும்பலுடன் தொடர்புள்ளது. இது தொடர்பாக விரிவாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

Related posts

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்