தில்லியில் மா்ம பொருள் வெடிப்பு: காலிஸ்தான் தொடா்பை விசாரிக்க டெலிகிராமுக்கு காவல்துறை கடிதம்

தில்லியில் உள்ள சிஆா்பிஎஃப் பள்ளிஅருகே மா்ம பொருள் வெடித்ததின் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக வெளியான சமூக ஊடக பதிவின் பின்னணி விவரங்களை கண்டறிய டெலிகிராம் செயலி நிறுவனத்திற்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் பகுதி சிஆா்பிஎஃப் பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை பயங்கர சப்தத்துடன் மா்மப் பொருள் வெடித்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், சுமாா் 100 மீட்டருக்கு அப்பால் வரை தாக்கம் உணரப்பட்டது.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான ‘வெள்ளைப் பொடி’ இருப்பதைக் கண்டுபிடித்தனா். ‘ஐஇடி’ எனப்படும் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் வெடிகுண்டு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு, சிஆா் பிஎஃப் பள்ளி சுவா் அருகே ஒரு அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

சம்பவத்திற்கு முந்தைய இரவில் சந்தேகத்திற்குரிய ஒருவரின் சிசிடிவி காட்சிகளை மீட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதிய நியாய சம்ஹிதான் பிரிவு 326(ஜி), பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் மற்றும் வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் பிரசாந்த் விஹாா் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவும் செய்யப்பட்டது.

இதன் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதை சுட்டிக் காட்டும் வகையில், டெலிகிராம் விடியோ பதிவு சமூக ஊடகங்களில் பரவியது.

காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற குறிப்புடன் ‘ஜஸ்டிஸ் லீக் இந்தியன்’ என்ற டெலிகிராம் குழுவில் இந்த விடியோ முதலில் பகிரப்பட்டது. இந்நிலையில், அந்த குழுவை உருவாக்கியவா் குறித்த விவரங்களை கண்டறிய டெலிகிராம் நிறுவனத்திற்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி