தில்லியில் தீபாவளியன்று துப்பாக்கியால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் பாஜக அரசு செயலற்று இருப்பதாக ஆளும் ஆம் ஆத்மி அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
தில்லி ஷதாரா பகுதியில் நேற்று (அக். 31) இரவு ஆகாஷ் ஷர்மா (40) மற்றும் அவரது உறவினரான சிறுவன் ரிஷப் ஷர்மா (16) அவர்களது வீட்டின் வெளியெ சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் போது ஆகாஷின் மகன் கிரிஷ் ஷர்மா (10) காயமடைந்துள்ளார். இவர்கள் தங்களின் வீட்டில் தீபாவளி கொண்டாடியபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்த காவல்துறையினர் சிசிடிவி காணொளி மூலம் சிறுவன் ஒருவனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | தில்லி: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி; ஒருவர் காயம்!
இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களுடன் பேசிய ஆம் ஆத்மி தலைரும் தில்லி அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ், “தில்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதால், நேற்று இரவு தீபாவளி கொண்டாடிய இருவர் பொது இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். சட்டம் ஒழுங்கை மேம்படுத்த பாஜக ஏதேனும் முயற்சி எடுத்திருந்தால், கொலைகள், கும்பல் சண்டைகள், கொள்ளைகள் போன்றவை இவ்வாறு தினந்தோறும் நடக்காது" என்று கூறினார்.
மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் சிறைகளில் இருந்து செயல்படுவதாகக் கூறப்படும் கும்பல்கள் குறித்தும், பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறித்தும் அமைச்சர் கேள்விகளை எழுப்பினார்,
அதுமட்டுமின்றி, “மும்பையில் நடப்பது போன்ற நிழல் உலக கும்பல்களின் குற்றங்கள் தற்போது தில்லியிலும் ஆரம்பித்துள்ளன. தேசிய தலைநகரில் இதுபோன்ற நிலைமை உருவாகியிருப்பதற்கு பாஜக பதில் சொல்லவேண்டும். இவை, மத்திய அரசின் தலையீடு இல்லாமல் நடப்பதற்கு வாய்ப்பில்லை” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | அயோத்தியை போன்று காசி, மதுராவும் ஜொலிக்க வேண்டும்: யோகி ஆதித்யநாத் விருப்பம்
தில்லியில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் பிரான்ஸ் தூதரிடமே திருட்டு நடைபெற்றதாக சௌரவ் பரஹ்வாஜ் தெரிவித்தார்.
பிரான்ஸ் தூதர் தியரி மத்யூவும் அவரது மனைவியும் அக்டோபர் 20 அன்று பிற்பகல் சாந்தினி சௌக் பகுதியில் ஷாப்பிங் சென்றிருந்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து மொபைல் போன் திருடப்பட்டது. இந்த சம்பவத்தில் மொபைல் போனை திருடியதாக ஏற்கனவே டெல்லி போலீசாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.