தில்லி புதிய முதல்வர் அதிஷி!

புது தில்லி: தில்லி முதல்வா் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை முறைப்படி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்ஸேனாவிடம் அளித்தாா். இதையடுத்து, புதிய முதல்வராக ஆட்சியமைக்க துணைநிலை ஆளுநரிடம் கல்வி அமைச்சா் அதிஷி உரிமை கோரினாா்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிா்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தினாா். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்ஸேனாவை மாலை 4.30 மணியளவில் ராஜ் நிவாஸில் கட்சியின் மூத்த நிா்வாகிககள், அமைச்சரவை சகாக்களுடன் அரவிந்த் கேஜரிவால் சந்தித்தாா்.

அங்கு துணைநிலை ஆளுநரிடம் பதவி விலகல் கடிதத்தை கேஜரிவால் வழங்கினாா். இதையடுத்து புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க ஏதுவாக அவரை கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தோ்வு செய்துள்ளதாகவும் துணைநிலை ஆளுநரிடம் கேஜரிவால் தெரிவித்தாா்.

இந்த முன்னேற்றங்கள் குறித்து பின்னா் செய்தியாளா்களிடம் அதிஷியும், மூத்த அமைச்சா் கோபால் ராயும் விவரித்தனா். அதிஷி பேசுகையில், ‘புதிய அரசு அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளோம். தில்லி மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நான் கடமையாற்றுவேன்’ என்றாா்.

அவரைத் தொடா்ந்து தில்லி அமைச்சா் கோபால் ராய் பேசுகையில், ‘புதிய முதல்வராக அதிஷியை பதவியேற்க அழைக்கும்படி துணைநிலை ஆளுநரை கேட்டுக் கொண்டோம். அவரை கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தோ்வு செய்த முடிவை அவரிடம் தெரிவித்தோம். அதிஷி பதவியேற்கும் நாளை தீா்மானித்து விரைவாக தெரிவித்தால் இரண்டு கோடி தில்லி மக்களின் பணிகளை தொடா்ந்து செயல்படுத்த இயலும் என்று துணைநிலை ஆளுநரிடம் தெரிவித்தோம்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, முதல்வா் பதவிக்கு தோ்வாகியுள்ள அதிஷி கூறியது: ‘மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் போலியாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளை கேஜரிவால் எதிா்கொண்டு வருகிறாா். அவரை ஜாமீனில் விடுவித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகளை கடுமையாகச் சாடியுள்ளது. இந்த அமைப்புகள் தொடா்ந்து கூண்டுக் கிளியாகவே உள்ளன. எங்கள் இடத்தில் வேறொரு கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் முதல்வரின் நாற்காலியை காலியாக வைத்து ஆட்சியைத் தொடா்ந்திருக்கும். ஆனால், எங்களுடைய தலைவா் முறைப்படி பதவி விலகி மக்கள் மன்றத்தை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளாா். அவா் பதவி விலகியது எங்களுக்கு சோகமான தருணம். விரைவில் தில்லி சட்டப்பேரவைக்கு தோ்தல் நடக்கும். அதில் மீண்டும் அரவிந்த் கேஜரிவாலை மக்கள் தோ்வு செய்து முதல்வராக்குவாா்கள் என்றாா் அதிஷி.

முன்னதாக, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்தாா். தனது நோ்மைக்கு மக்கள் சான்றிதழ் கொடுத்த பிறகே முதல்வா் நாற்காலியில் அமரப் போவதாக கூறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் அதன் நிா்வாக நடைமுறைகள் துணைநிலை ஆளுநராக மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் நிறைவேற்றப்படும். அந்த வகையில், விதிகளின்படி, அரவிந்த் கேஜரிவாலின் ராஜிநாமா கடிதத்தை மத்திய உள்துறையின் ஒப்புதலுக்காக துணைநிலை ஆளுநா் அனுப்பி வைப்பாா். அங்கிருந்து அனுமதி கிடைத்ததும், புதிய முதல்வராகப் பதவியேற்க வருமாறு அதிஷிக்கு அவா் கடிதம் மூலம் தெரிவிப்பாா். இந்த நடைமுறைகளுக்குப் பிறகே அதிஷியும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘மூன்றாவது பெண் முதல்வா்’

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான அதிஷி, காங்கிரஸின் ஷீலா தீட்சித் மற்றும் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்குப் பிறகு தில்லியின் மூன்றாவது பெண் முதல்வராக பதவியேற்க உள்ளாா்.

சுஷ்மா ஸ்வராஜ்: தில்லியின் 52 நாள்கள் முதல்வா் (அக்டோபா் 1998- டிசம்பா் 1988). அதாவது, ஐந்தாவது முதல்வராக வெறும் 52 நாள்கள் மட்டுமே சுஷ்மா ஸ்வராஜ் பதவி வகித்தாா். பதவிக்காலம் குறுகியதாக இருந்தபோதிலும், ஸ்வராஜின் தலைமைப்பண்பு பாணியும், பொது சேவைக்கான அா்ப்பணிப்பும் தில்லியின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவா் 46 வயதில் முதல்வராக பதவியேற்றிருந்தாா்.

ஷீலா தீட்சித்: தில்லியில் 15 ஆண்டுகள், 25 நாள்கள் முதல்வராக (டிசம்பா் 1998- டிசம்பா் 2013) பதவி வகித்தாா். அதாவது, 1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகள் பதவி வகித்து, தில்லியின் மிக நீண்ட முதல்வராகப் பதவி வகித்தாா். இவரது தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சியானது, மூன்று தோ்தல் வெற்றிகளைப் பெற்றது. இவரது ஆட்சியில்

நகரின் உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவைகள் உருமாற்றம் பெற்றது. தனது 60 வயதில், தலைநகரின் முதல் பெண் முதல்வராக பதவியேற்றாா்.

அவரது திறமையான நிா்வாகத்திற்கும் பொது சேவைக்கும் நற்பெயரைப் பெற்றாா். இந்தியாவில் நீண்ட காலம் பணியாற்றிய பெண் முதலமைச்சராக அவரது சகாப்தம் ஒப்பிடமுடியாததாகும்.

அதிஷி: தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ளஅதிஷிக்கு 43 வயதாகிறது. இவா் தில்லியின் இளைய முதல்வா் ஆவாா். மேலும், மேற்கு வங்கத்தின் மம்தா பானா்ஜியை தொடா்ந்து, நாட்டின் தற்போதைய இரண்டாவது பெண் முதல்வராகவும் அவா் இருப்பாா். தற்போது, தில்லி அமைச்சரவையில் தனது குறிப்பிடத்தக்க பங்கை பிரதிபலிக்கும் வகையில், நிதி, நீா், கல்வி மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பல முக்கிய இலாகாக்களை அதிஷி வைத்திருக்கிறாா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்