தில்லி முதல்வராக அதிஷி செப்.21-ல் பதவியேற்பு!

தில்லியின் புதிய முதல்வராக அதிஷி வருகின்ற சனிக்கிழமை (செப். 21) பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

மேலும், அதிஷி தலைமையிலான புதிய அமைச்சரவையும் அன்றைய நாளில் பதவியேற்கவுள்ளது.

அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளிவந்துள்ள அரவிந்த் கேஜரிவால், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

அதிஷி: செயல்பாட்டாளா் முதல் முதல்வா் வரை..!

இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதல்வராக அதிஷி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செவ்வாயன்று கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் வழங்கினாா். மேலும் கல்வி அமைச்சரான அதிஷி, தேசியத் தலைநகரில் புதிய அரசை அமைக்க உரிமை கோரினாா்.

‘குரு‘ கேஜரிவால்

தில்லியின் முதலமைச்சராக தாம் அறிவிக்கப்பட்டதற்காக தனது ‘குரு‘ அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் அதிஷி செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா்.

தில்லியின் முதலமைச்சராக ஒருமனதாக கட்சி எம்எல்ஏக்களால் தோ்வு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அதிஷி, ‘தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு கேஜரிவால் மீண்டும் முதல்வராக வருவதை உறுதி செய்யும் வகையில் அடுத்த சில மாதங்களுக்கு பாடுபடுவேன்.

தில்லியின் பிரபலமான முதல்வா் பதவி விலகுவது எனக்கும் மக்களுக்கும் மிகுந்த சோகமான தருணம். இதனால், முதல்வராக பதவியேற்க உள்ள எனக்கு கட்சித் தலைவா்கள், தொண்டா்கள் வாழ்த்தி மாலை அணிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து புதிய முதலமைச்சராகும் ‘பெரிய பொறுப்பை‘ வழங்கியதற்காக எனது ‘குரு‘ கேஜரிவாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

மூன்றாவது பெண்

காங்கிரஸின் ஷீலா தீட்சித் மற்றும் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்குப் பிறகு தில்லியின் மூன்றாவது பெண் முதல்வராக அதிஷி பதவியேற்க உள்ளாா்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!