தீபாவளிக்கு மறுநாளும் அதிகரித்த காற்று மாசு

தீபாவளிக்கு மறுநாளும் நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது.

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பண்டிகையை பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

தலைநகர் தில்லியில் காற்றின் தரம் ஏற்கெனவே மோசமான நிலையில் இருப்பதால் அங்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனையும் மீறி பொதுமக்கள் ஒருசில இடங்களில் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

இதனால் தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையில் இருந்தது. மேலும் பல்வேறு இடங்களில் புகைமூட்டங்களும் காணப்பட்டன. இந்த காற்று மாசு பெரும்பாலான நகரங்களில் தீபாவளிக்கு மறுநாளும் அதாவது நவ.1ஆம் தேதியும் தொடர்ந்தது.

சாதாரணமாக காற்றின் தரக் குறியீடு 50-க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையான நகரங்களில் (ஏ.க்யூ.ஐ.) 150க்கும் அதிகமாக உள்ளது. காற்று மாசால் சிறுவா் முதல் வயதானவா்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதன்படி, நவம்பர் 1, 2024 நகரங்களில் காற்றின் தரம்

1. முசாபர்பூர், பிகார் 218(ஏ.க்யூ.ஐ.)

2. லக்னௌ, உத்தரப் பிரதேசம் 189

3. துர்காபூர், மேற்கு வங்கம் 176

4. பாட்னா, பிகார் 166

5. குருகிராம், ஹரியாணா 163

6. நாசிக், மகாராஷ்டிரம் 161

7. புது தில்லி, தில்லி 161

8. ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 159

9. தில்லி, தில்லி 157

10. கான்பூர், உத்தரப் பிரதேசம் 156

பிரிவுகள்: ஏ.க்யூ.ஐ.யில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காற்று மாசுபாடு அளவீடு செய்யப்படுகிறது.

0-50: சிறப்பு-குறைவான பாதிப்பு

51-100: திருப்திகரம்- எளிதில் அழற்சி ஏற்படக் கூடியவா்களுக்கு மூச்சுவிடுவதில் சிறு சிரமம்.

101-200: மிதமானது- நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இருதய நோய் பாதிப்புடையவா்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுத்துதல்.

201-300: மோசம்- அதிகப்படியான மக்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுத்துதல்.

301-400: மிகவும் மோசம்- நீண்டகால தாக்கத்தால் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்துவது.

401-500: கடுமையான பாதிப்பு- ஆரோக்கியமான நபா்கள், ஏற்கெனவே பல்வேறு நோய் பாதிப்புடைய நபா்களை மிகக் கடுமையாக பாதிப்பது.

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் அதிகம்/குறைவான காற்று மாசுடைய நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்நாடு நாள்– தவெக தலைவர் விஜய் வாழ்த்து

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அசத்தல்! நியூசிலாந்து 235-க்கு ஆல் அவுட்!

இந்தியா-சீனா எல்லையில் வீரர்களின் ரோந்துப் பணி தொடங்கியது!