தீபாவளியையொட்டி 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று காலை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த போது, சிறப்புப் பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட தகவலில், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல அக்.28 முதல் 30-ஆம் தேதி வரை 11,176 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும்.

இந்த சிறப்புப் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஏழு முன்பதிவு முனையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என 9 மையங்கள் இயங்கி வருகின்றன.

தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல இதுவரை 1,02,000 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பேருந்துகளில் சென்றனர். இந்த ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் செல்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புகார் அளிக்க 24×7 கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். பேருந்து நிலையத்துக்கு வரும் மக்களுக்கு உதவ, பேருந்துகளின் வழித்தடம் குறித்து தகவல்களை அளிக்க பேருந்து நிலையங்களின் முன்புறம் தகவல் மையங்கள் இயங்கும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும். பல்வேறு ஊர்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3 நாள்களுக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பிற ஊர்களில் 2,910 பேருந்துகளும் பண்டிகைக்குப் பின் சென்னை திரும்ப வசதியாக 9,441 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்ப 3,165 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

காரில் சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து, காரில் சொந்த ஊர் செல்வோர், தாம்பரம்-பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சென்னையிலிருந்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல அமைச்சர் அறிவுரை வழங்கியருக்கிறார்.

தேவைக்கு ஏற்ப, தனியார் பேருந்துகளையும் தமிழக அரசு இயக்கவிருக்கிறது. இது குறித்து தனியார் பேருந்து நிறுவனங்களிடம் பேசப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளை ஏற்கனவே இயங்கி வந்த தனியார் நிறுவன ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கொண்டே இயக்கப்படும் என்பதால் பிரச்னை ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

Related posts

Chinu Kwatra’s dream to make India a developed and happy nation

Tata Soulfull Is Bringing Ancient Superfood Millets To Consumers In Modern Formats

Celebrating Diwali With Social Harmony, Innovation And Creativity