தீபாவளி பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து அனைவரும் இணைந்து தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடுகிற வகையில் ஆட்சி நடத்தி வருகிற பா.ஜ.க.விற்கு மக்கள் பாடம் புகட்டும் நிலை உருவாகி வருகிறது.

தீமையை வதம் செய்த தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வகையில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.

பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம் போல் மற்ற மதத்தவர்களோடு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் பின்னணியில் அமித் ஷா? கனடா கசியவிட்ட தகவல்!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை:

“கேப்டன் மனிதராய் பிறந்து, புனிதராய் வாழ்ந்து தெய்வமாக இன்றைக்கு நம் அனைவரின் உள்ளத்திலும் இருக்கிறார். கேப்டன் இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தீபாவளி, நம் தலைவர் நம்மிடையே இல்லை என்ற சோகம் நமக்கு மிகப்பெரிய அளவில் இருந்தாலும், கேப்டன் நமது கொடியின் நடுவில் இருக்கும் தீப ஒளியாய் நம் அனைவரின் உள்ளத்திலும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறார்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தமிழக மக்கள் அனைவராலும், பெண்களாலும் இளைஞர்களாலும், தொண்டர்களாலும் வரவேற்க கூடிய, விரும்பக் கூடிய மகத்தான வெற்றிக் கூட்டணியை நமது கேப்டன் தெய்வமாக நம்முடன் இருந்து ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டும் என்று இந்த தீபாவளி நாளில் நாம் அனைவரும் கேப்டனை நினைத்து வழிபடுவோம்.

நமக்கான ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் நம்மோடு இருந்து வழிநடத்தி, அவருடைய கனவு, லட்சியத்தை வென்றிட ஒன்று சேர்ந்து இந்த தீபாவளி நாளில் நாம் அனைவரும் கேப்டனை நினைத்து வணங்குவோம். தமிழக மக்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம்…”

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை:

“தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை தன் கொடுஞ்செயல்களால் பெரும் துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசுரன் எனும் ஈவு இரக்கமற்ற அரக்கனை திருமால் அழித்த தினமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் அமையட்டும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் இந்த தீபாவளித் திருநாளில் மக்களை சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் விலகி அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”

Related posts

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!