தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பிய மக்கள்: சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பிய மக்கள்: சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தீபாவளி விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்பியதால் புறநகர் பகுதிகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 31-ம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்கள் வெளியூர் செல்ல வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. சிறப்புப் பேருந்துகளில் மட்டும் சுமார் 6 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இந்நிலையில் விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் மாலை முதல் பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். இவர்களில், ஏராளமானோர் நேற்று ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்பினர். இதனால் பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நெரிசல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் என பல தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகினர். நெரிசலை சமாளிக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வெளியூர்களில் இருந்து வந்த பேருந்துகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வரை பல கி.மீ. தூரத்துக்கு வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். பெருங்களத்தூரில் வந்திறங்கிய பலர் மின்சார ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் சென்றதால் அவற்றிலும் நெரிசல் காணப்பட்டது. இதற்காக கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு மாநகர பேருந்துகள் மற்றும் சிறப்பு மின்சார ரயில்களும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்திறங்கிய பின், மாநகரப் பேருந்துகளில்
ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக பயணிகள் சென்றனர்.
இதனால் பேருந்து நிலைய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

அதேபோல், லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்புவார்கள் என்பதால், வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,561 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவைதவிர தனியார் பேருந்துகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களில் என 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னை திரும்பியதால், வண்டலூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கியது.

விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், செங்கல்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. தாம்பரம் வரை இந்த நெரிசல் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு வரை நீடித்தது. நேற்று அதிகாலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் சென்னைக்கு வரத்தொடங்கியதால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கியது.

காலை 5 மணிக்கு பிறகு கிளாம்பாக்கம் முதல் தாம்பரம் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன. காலை 10 மணிக்கு பிறகே, போக்குவரத்து நெரிசல் சீரானது.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்