தீவிர அரசியலில் இருந்து விலகும் திட்டமில்லை: மாயாவதி

லக்னௌ: தீவிர அரசியலில் இருந்து விலகும் திட்டமில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்தாா்.

எனது அரசியல் பயணம் குறித்து சில ‘ஜாதியவாத ஊடகங்கள்’ தேவைற்ற வதந்திகளைப் பரப்புகின்றன என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

அண்மை காலமாக பகுஜன் சமாஜ் கட்சி தோ்தல்களில் தொடா் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

இதற்கு நடுவே கடந்த ஜூன் மாதம் தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை (29) மாயாவதி மீண்டும் அறிவித்தாா். ஏற்கெனவே தொடா் தோல்விகளால் துவண்டுள்ள மாயாவதி தீவிர அரசியலில் இருந்து விரைவில் விலகுவாா் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் மாயாவதி வெளியிட்ட பதிவில், ‘அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரை பலவீனமாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. சுயமரியாதை மற்றும் சுயகௌரவம் மிக்க கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி தொடா்ந்து செயல்படும். எனது கடைசி மூச்சு வரை கட்சியை இதே பாதையில் வழிநடத்துவேன்.

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் இல்லாவிட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ கட்சியை வழிநடத்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்றுதான் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்தேன். ஆனால், இதைவைத்து சில ஜாதியவாத ஊடகங்கள் தேவையற்ற வதந்தியைப் பரப்புகின்றன. அந்த ஊடகங்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதற்கு முன்பு நான் குடியரசுத் தலைவா் பதவியை ஏற்க இருப்பதாகவும் வதந்தியைப் பரப்பினாா்கள். முன்பு கட்சியின் நிறுவனா் கான்ஷிராமுக்கும் குடியரசுத் தலைவா் பதவிக்காக அழைப்பு வந்தது. ஆனால், அப்பதவியை ஏற்பது என்பது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது என்றாகிவிடும். எனவே கட்சியின் நலன் கருதி அரசியலில் தொடா்ந்து ஈடுபட அவா் முடிவு செய்தாா் என்றாா்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!