தீவிர புயலாக கரையைக் கடக்கும் ‘டானா’: வானிலை மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இதன் தாக்கத்தால், மத்திய கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இன்று காலை மாறியது.

இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று காலை 11.30 மணியளவில் வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தீவிர புயல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும், 23-ஆம் தேதி புயலாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸா – மேற்கு வங்க கடற்கரை அருகே 24-ஆம் தேதி காலை அடையும் புயல், மேலும்ம் வலுவடைந்து தீவிரப் புயலாக புரி – சாகர் தீவுகள் இடையே 25-ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கவுள்ளது.

இந்த புயலுக்கு கத்தாா் நாடு பரிந்துரைத்த டானா என்ற பெயரிடப்பட்டுள்ள நிலையில், இது கரையைக் கடக்கும்போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்