துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: திமுக 4.0-ன் தொடக்கமும் கட்சியில் தாக்கமும்!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: திமுக 4.0-ன் தொடக்கமும் கட்சியில் தாக்கமும்!

துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு அரசியல் கட்சிகள், நடிகர்கள், நடிகர் சங்கம் என பல தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, ‘திமுக 4.0’ தொடங்கிவிட்டது எனப் பேசி வருகின்றனர். அதாவது அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் அடுத்து உதயநிதி நான்காம் தலைமுறை தலைவராகப் பார்க்கப்படுகிறார் என்பதுதான் அதன் பொருள். ஆனால், உண்மையில் என்ன சாதித்தார் என திமுக தலைமை உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வழங்க முடிவு செய்தது என்னும் கேள்வி எழுந்துள்ளது.

ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் அரசியல் டைம்லைனை ஒப்பிட்டால் இந்தக் கேள்வி ஏன் எழுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். தற்போதைய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தன் கட்சி அரசியலை 1983-ம் ஆண்டு திமுக இளைஞர் அணி செயலாளராக தொடங்கினார். பின் 1989-ம் ஆண்டு எம்.எல்.ஏ, 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சர், 2009-ம் ஆண்டு துணை முதல்வர். இறுதியாக 2021-ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்றார்.

ஆனால், உதயநிதி 2019-ம் ஆண்டு இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. பின் 2021-ம் ஆண்டு எம்.எல்.ஏ பதவி, 2022-ம் அமைச்சர் பதவி, 2024-ம் ஆண்டு துணை முதல்வர் என தன் தீவிர அரசியல் பயணத்தைத் தொடங்கிய 5-ம் ஆண்டு 'துணை முதல்வர்’ என்னும் பதவியைப் பெற்றிருக்கிறார். ஆனால், அவரின் தந்தை ஸ்டாலினுக்கு துணை முதல்வர் என்னும் பொறுப்பை ஏற்கக் கட்சியில் 26 ஆண்டு காலம் உழைக்க வேண்டியிருந்தது. இந்த வேறுபாட்டால்தான் உதயநிதியின் அனுபவம், அரசியல் தெளிவு, கொள்கை புரிதல் போன்றவற்றின் மீது மக்களுக்கு கேள்வி எழுகிறது. உதயநிதி துணை முதல்வராக சாதிப்பாரா என்பது அடுத்த கேள்வி. ஆனால், எதன் அடிப்படையில் உதயநிதிக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது?

உதயநிதி ஆட்சிக்கு செய்தது என்ன? – அவர் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் அத்துறைக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா, பார்முலா கார் ரேஸ் என முக்கியமான போட்டிகளைத் தலைமை ஏற்று நடத்தி கவனத்தைப் பெற்றார். குறிப்பாக, செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் நிகழ்ச்சி சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டதாகக் கூறினர். இப்படியாக விளையாட்டுத் துறையில் அனைவரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.

கட்சிக்கு உதயநிதி செய்தது என்ன?- 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி. அந்தத் தேர்தலில் 38 இடங்களை வென்றது திமுக. இதற்கு காரணம் உதயநிதியின் தேர்தல் பிரச்சாரம்தான் என திமுகவினரால் சொல்லப்பட்டது. 2021-ம் ஆண்டு தேர்தலின்போது மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கப்படாததைக் கண்டித்து ஒற்றைச் செங்கலை உதயநிதி உயர்த்திப் பிடித்தது பேசுபொருளானது. அதேபோல், திமுகவின் முக்கிய வாக்குறுதிக்காகக் கட்சி அளவில் சில முன்னெடுப்புகளைச் செய்தார். ‘Ban NEET’ என்னும் பெயரில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினார். அப்போது நீட் பிஜி தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டேஜ் எடுத்தாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், முட்டையைக் காண்பித்து கவனத்தை ஈர்த்தார்.

2024 மக்களவைத் தேர்தலின்போது சனாதனம் குறித்து உதயநிதி பேசியது சர்ச்சையானது. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் இதனை ரசிக்கவில்லை. இந்தப் பேச்சு இண்டியா கூட்டணிக்குப் பின்னடவை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டது. இருப்பினும் தன் கருத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்தார் உதயநிதி. இது திமுகவின் கொள்கைகளை உள்வாங்கியவர்களிடம் கவனம் பெற்றது.

“கடந்த 2007-ம் ஆண்டு முதல் இளைஞர் அணி மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. அதற்கு தலைமை ஏற்றிருந்தார் ஸ்டாலின். அதன்பின் இரண்டு ஆண்டுகளில் துணை முதல்வர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.இந்த நிலையில், 17 ஆண்டுகள் கடந்து இரண்டாவது இளைஞர் அணி மாநாடு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் நடந்தது. இதை வெற்றிகரமாக நடத்தி முடித்த சில மாதங்களில் துணை முதல்வர் அரியணையில் ஏறியுள்ளார் உதயநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.”

ஆனால், இப்போது உதயநிதி செய்ததை விட கட்சியில் உள்ள சீனியர்கள் பல வெற்றிகளைக் கட்சிக்குப் பெற்று தந்துள்ளனர். ஆனால், சீனியர்களுக்கு இந்தப் பொறுப்பு மறுக்கப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்தவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், “துணை முதல்வர் பதவியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், சீனியர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது உதயநிதிக்கு எந்த தகுதி அடிப்படையில் துணை முதல்வர் வழங்கப்படுகிறது” என்னும் கேள்வியை எழுப்பினார். இந்தக் கேள்வி பலருக்கும் உள்ளது.

மக்களை ஏமாற்றும் வேலையா? – ஜெயலலிதா 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது மரணமடைந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பழனிச்சாமி என அதிமுகவில் பல முதல்வர்கள் உருவானார்கள். அப்போது ஜெயலலிதாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி கிடைத்த வெற்றியை இவர்கள் பங்கு போட்டுக் கொள்வதாக திமுக சார்பாகவே விமர்சனம் வைக்கப்பட்டது. அப்படியானால், முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என அறிவித்து திமுக தேர்தலைச் சந்தித்தது. ஆனால், தற்போது துணை முதல்வராக உதயநிதி அறிவிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்தமாக அதிகாரம் அவருக்கு செல்லும் நிலையைத்தான் குறிக்கிறது. அப்படியானால் இதுவும் மக்களை ஏமாற்றும் வேலைதான் என சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

மூத்த தலைவர்களுக்கு வருத்தமா? – ”உதயநிதி துணை முதல்வர் பதவியேற்பது மகிழ்ச்சி, அவரின் மகன் இன்பநிதி வந்தாலும் சேவை செய்வேன்” என மூத்த அமைச்சர்கள் மார்தட்டிக் கொண்டாலும் அவர்கள் சிலருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. அதை வெளிப்படுத்தியவர்களில் துரைமுருகன் முக்கியமானவர். “யாருக்குதான் துணை முதல்வர் ஆக வேண்டும் என ஆசை இருக்காது” எனப் பேசினார்.

எனவே, இந்த வருத்தங்களை எல்லாம் உதயநிதி எப்படி அணுசரித்து செல்லப்போகிறார் என்னும் கேள்வி இருக்கிறது. துணை முதல்வராகப் பதவியேற்கும் தனக்கு மூத்த அமைச்சர்களின் துறை வேண்டாம். விளையாட்டுத் துறையே போதும் என்னும் வார்த்தைகளுக்குப் பின்னால் மூத்தவர்கள் ஆட்சிக்கு தேவை என்பதை உணர்த்தியிருக்கிறார். ஆனால், இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்.

அதேபோல் வாரிசு அரசியல் என்னும் விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் வைக்கத் தொடங்கிவிட்டனர். இது மக்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இது எதிரொலிக்குமா? இல்லை, இந்த விமர்சனத்தை எல்லாம் மழுங்கடிக்கும் வகையில் செயல்படுவாரா உதயநிதி? – பார்க்கலாம் பொறுத்திருந்து.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்