துரோகத்தின் மொத்த உருவம் அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யபட்டுள்ளார். ஒரு அரசியல் கட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. காவல் துறை மீது ரவுடிகளுக்கு அச்சம் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

"அண்மை காலமாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சித்தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். நெல்லையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயக்குமார், சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம், சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியாக இல்லை என்பதைக் காட்டுகின்றன. பொது மக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பாதுகாப்பான சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்பதை இது போன்ற சம்பவங்கள் தெளிவுப்படுத்துகிறது.

அண்ணாமலை பேசியது தொடர்பாக உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். இருந்தாலும் துரோகி என அண்ணாமலை சொல்லியுள்ளார். நான் துரோகி கிடையாது. துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான். எங்கள் தலைவர்களை அவதூறாக, கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். கட்சித்தலைவர் என்ற பதவிக்கு அண்ணாமலை பொருத்தமில்லாதவர். நாங்கள் 50 ஆண்டுகாலம் கடுமையாக உழைத்து இந்த பதவிக்கு வந்துள்ளோம். அவரை போல நியமன பதவி கிடையாது. ஒரு அரசியல் தலைவர் எப்படி பேச வேண்டும் என்பதை அண்ணாமலை கற்றுக்கொள்ள வேண்டும்."

இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி