தூத்துக்குடி மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு 3.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ.3.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

கைது

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து 2 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கைக் கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் நுழைந்தாக கூறி கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் கல்பிட்டி மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.

அபராதம்

இதுகுறித்த விசாரணை, கல்பிட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஒரு படகில் சென்ற 12 மீனவர்களுக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த 3 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

மற்றொரு படையில் சென்ற 10 மீனவர்கள் மீதான வழக்கு மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மற்றொரு படகில் இருந்த 10 மீனவர்களுக்கு இலங்கை பணத்தில் தலா ரூ.35 லட்சம் அபராதம் விதித்தும் அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தர்னா போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அந்த 10 மீனவர்களும் நீதிமன்ற வளாகம் முன்பு திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் சமானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

தற்போது சிறையில் உள்ள 22 மீனவர்களையும் விரைந்து மீட்குமாறு தருவைகுளம் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!