தூர்தர்ஷன் இந்தி விழாவில் பங்கேற்பு: ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

தூர்தர்ஷன் இந்தி விழாவில் பங்கேற்பு: ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை: தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்தி விழா நடத்தப்படுவதற்கும், அதில் ஆளுநர் பங்கேற்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் (டிடி) தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா கொண்டாட்டத்துடன், ‘இந்தி மாதம்’ நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

முன்னதாக, ‘இந்தி மாத நிறைவு விழாவை உடனே நிறுத்த வேண்டும். அதில் ஆளுநர் பங்கேற்க கூடாது’ என்று வலியுறுத்தி, டிடி தொலைக்காட்சி அலுவலகம் முன்பு திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த சிவிஎம்பி எழிலரசன் எம்எல்ஏ கூறியதாவது: டிடி தொலைக்காட்சியின் பொன்விழாவோடு, இந்தி மாத நிறைவு விழாவையும் சேர்த்து நடத்துகின்றனர். அதில் ஆளுநர் கலந்து கொள்கிறார். இந்தியை மட்டுமே இந்தியாவின் மொழியாக கொண்டாட மோடி அரசு விரும்புகிறது.

இந்தி, ஆங்கிலம் ஆகியவை அலுவல் மொழிகள் மட்டுமே. அப்படி இருக்க, இந்தி தேசிய மொழி என்பதுபோல ஒரு பிம்பத்தை ஏற்படுத்த மோடி அரசு முற்படுகிறது.

வேண்டும் என்றே தமிழகத்தில் இந்தியை திணிக்க முற்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சியில் இந்தி மாத விழா கொண்டாட கூடாது. அதில் ஆளுநர் பங்கேற்க கூடாது. விழாவையே ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை கைது செய்து, சமூகநல கூடத்தில் தங்கவைத்த திருவல்லிக்கேணி போலீஸார், மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

Related posts

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” – முதல்வர் ஸ்டாலின்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு